இந்தியா
திருவண்ணாமலையில் 2000 அடிக்கு மேல் மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு… பொதுமக்கள் அச்சம்
திருவண்ணாமலையில் 2000 அடிக்கு மேல் மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு… பொதுமக்கள் அச்சம்
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. இதேபோல், திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபரி நீரானது சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், திருவண்ணாமலை மாநகராட்சியைச் சுற்றியுள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்ததால் நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.
இதற்கிடையே, திருவண்ணாமலையின் மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் இப்பகுதியில் பெய்த தொடர் மழையால், மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில், இரண்டு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.
அதில் ஒரு வீட்டில் வசித்து வந்த தம்பதி, அவரது மகன், மகள் மற்றும் உறவினரின் மூன்று சிறுமிகள் என மொத்தம் ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்றுமாலை வீடுகள் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், அவர்களால் மீட்புப்பணியை தொடர முடியவில்லை. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆனால், இரவு நேரம் என்பதால், மீட்பு பணியை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது.
Also Read :
வரலாறு காணாத கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்.. தனித்தீவாக மாறிய ஊத்தங்கரை!
இதனால், இரவு முழுவதும் மீட்பு பணிகள் தொடங்கப்படவில்லை. அதிகாலையே பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 7 பேரை தேடும் பணிகள் தொடங்கியுள்ளன.
#JUSTIN
திருவண்ணாமலையில்
மூன்றாவது நிலச்சரிவு
தீப மலையின் முன் பகுதியில் 2000 அடிக்கு
மேல் மிகப்பெரிய அளவிலான மண்சரிவு #Tvm #Tiruvannamalai #Landslide #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/Bb8xezhuTE
இதனிடையே திருவண்ணாமலையில் மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவண்ணாமலை தீப மலையின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 2000 அடிக்கு மேல் மலையில் இருந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்திற்கு முன்பகுதியில் நிலச்சரிவு என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வஊசி நகர் மலைப்பகுதியில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது 3 வது நிலச்சரிவு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.