இந்தியா
மழை வெள்ள பாதிப்பு… ரூ.2000 கோடி வேண்டும் : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!
மழை வெள்ள பாதிப்பு… ரூ.2000 கோடி வேண்டும் : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!
ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி விடுவிக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 2) கடிதம் எழுதியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நடைபெற்று வரும் மீட்பு பணிகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மழையால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேட்டி, சேலை, உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், இழப்பீடுகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது, எவ்வளவு சேதாரம் ஏற்பட்டிருக்கிறது; மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயத்தைப் பொறுத்தவரையில் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இவற்றையெல்லாம் கணக்கெடுத்து அனுப்புவது எங்களுடைய கடமை. அதைச் செய்வது அவர்களுடைய கடமை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவரின் அந்த கடிதத்தில், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 இலட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ₹2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமர் மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.