இந்தியா

வெள்ளத்தில் புதுச்சேரி : ரூ.5000 நிவாரணம் அறிவித்த ரங்கசாமி

Published

on

வெள்ளத்தில் புதுச்சேரி : ரூ.5000 நிவாரணம் அறிவித்த ரங்கசாமி

கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிவாரணமாக ரூ. 5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று (டிசம்பர் 2) அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி – மரக்காணம் இடையே நேற்று அதிகாலையில் கரையை கடந்தது. எனினும் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

Advertisement

புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அங்கு அதிகபட்சமாக ஒரே நாள் இரவில் 48.4 செமீ மழை பதிவானது.

புதுச்சேரியின் வெள்ளப்பாதிப்பு குறித்து நேற்று நமது மின்னம்பலத்தில், “வெள்ள நகரமான வெள்ளை நகரம்… புதுச்சேரி மூழ்கியது ஏன்?” என செய்தி வெளியிட்டிருந்தோம்.

குறிப்பாக ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், முத்தியால் பேட்டை, வில்லியனூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது ஏன் என்பது குறித்தும், வாய்க்கால்களில் பாய்ந்த வெள்ளம், சாலைகளைத் தாண்டி வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் அதில் விரிவாக குறிப்பிட்டிருந்தோம்.

Advertisement

இந்த நிலையில், கனமழை சேதங்களை இன்று பார்வையிட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் 10,000 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாயிகளின் துயரத்தை போக்குவிதமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்க அரசு முடிவு செய்யப்பட்டது.

Advertisement

கனமழையினால் இறந்த கால்நடைகளில் பசுமாடு ஒன்றுக்க ரூ.40,000. கிடாறி கன்றுகளுக்கு ரூ.20,000, சேதமழைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும், “ரூ.100 கோடி அளவில் மழை பாதிப்பு சேதம் உள்ளதாக முதல் கட்டமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். கனமழை நிவாரணத் தொகையை விரைந்து காலத்தோடு அளித்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version