இந்தியா
Exclusive: திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட என்ன காரணம்? – விளக்கிய பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் ஜி.பி. கணபதி
Exclusive: திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட என்ன காரணம்? – விளக்கிய பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் ஜி.பி. கணபதி
பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் அதி கன மழை பொழிவு இருந்தது. திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏழு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
நியூஸ்18 தமிழ்நாட்டில் இன்று சொல்லதிகாரம் நிகழ்ச்சி, ‘வீசியடித்த ஃபெஞ்சல் புயல்.. வெள்ளத்தில் மிதக்கும் வட மாவட்டங்கள் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்.. களத்தில் முதலமைச்சர். சவாலாக மாறுகிறதா மீட்புப் பணி?’ எனும் தலைப்பில் நடந்தது.
இதில், நெறியாளர் கார்த்திகைச்செல்வன், “திருவண்ணாமலையில் நகர்ப்புறத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு என்பது ஒப்பிட்டு அளவில் சிறியதாக இருக்கிறது. அதுவே வனப்பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலச் சரிவு நகர்ப்புறத்தில் ஏற்பட்டிருந்தால் இன்னும் பாதிப்பு அதிகமாகி இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தச் சரிவுக்கான காரணம் என்ன?” என்று பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் ஜி.பி.கணபதியிடம் கேள்வியை முன்வைத்தார்.
இதற்கு பதில் அளித்த பேராசிரியர் ஜி.பி. கணபதி, “இந்தச் சரிவுக்கு கடந்த இரு தினங்களாக அதாவது கடந்த 30ம் தேதி காலை துவங்கி 2ம் தேதி காலை வரை பெய்த மழையின் அளவு சுமார் 23.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை பகுதி என்பது அதிக நிலச்சரிவு ஏற்படும் பகுதியாக இல்லாமல், மிதமான நிலச்சரிவு ஏற்படும் பகுதியாக தான் நாம் வரையறுத்திருக்கிறோம். எனவே அதீத மழையின் காரணமாக ஏற்பட்டது என்று சொல்லலாம்.
இரண்டாவது, திருவண்ணாமலை மாவட்டத்தின் கடந்த 200 ஆண்டு வரலாற்றை பார்த்தால் அதிகளவில் நில அதிர்வு வந்திருக்கிறது. அதிகப்பட்சமாக ரிக்டர் அளவுகோலில் 5 முதல் 3 எனும் அளவிற்கு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளது.
எனவே மண்ணில் தளர்வு ஏற்பட்டு இருக்கும் சூழலில் அதிக மழையும் பொழிந்ததால் நிலச் சரிவு ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.
அதேபோல், நிகழ்ச்சியில் பேசிய பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜ், “நிலச்சரிவுக்கு புவியியல், நிலவியியல், உருவம் சார்ந்து என மொத்தம் ஐந்து, ஆறு காரணங்கள் இருக்கின்றன. திருவண்ணாமலை மலை உருவகமே நிலச்சரிவு ஏற்படுவதற்கான உருவம் சார்ந்த அமைப்பை கொண்டுள்ளது. எனவே அதில் அதிக மழை பெய்யும் போது, மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவுக்கு பிறகு ஊட்டி, குன்னூர், கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளை ஆய்வு செய்ய குழு அமைத்தோம். தற்போது திருவண்ணாமலை நிலச்சரிவு நிகழ்ந்திருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலைப் பகுதியிலும், ஆய்வு செய்து நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று கண்டறிந்தால், அங்கிருக்கும் குடியிருப்புகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றக்கூடிய பணிகளை செய்ய வேண்டும்” என்றார்.