இந்தியா
ஃபெஞ்சல் புயல்: ரேஷன் கார்டுக்கு ரூ.2,000… பயிர் சேதத்துக்கு ரூ.22,500.. தமிழக அரசு அறிவித்த நிவாரணம் முழு விவரம்!
ஃபெஞ்சல் புயல்: ரேஷன் கார்டுக்கு ரூ.2,000… பயிர் சேதத்துக்கு ரூ.22,500.. தமிழக அரசு அறிவித்த நிவாரணம் முழு விவரம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழிவு இருந்தது. இதில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், இந்த மாவட்டங்களில் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டமும், கடலூர் மாவட்டமும் கடும் சேதத்தைச் சந்தித்தது. மழை வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மழைவிட்டு மூன்று நாட்களில் பாதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 2000 கோடி நிவாரணம் வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (3-12-2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1.சேதமடைந்த குடிசைகளுக்கு 10 ஆயிரம்,
2.நெற்பயிர், பாசனப் பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.17 ஆயிரம்.
3.பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500.
4.மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500.
5.எருது, பசு உயிரிழந்திருந்தால் ரூ.37,500.
6.வெள்ளாடு, செம்மறி ஆட்டுக்கு ரூ.4,000.
7.கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.