இந்தியா
“சங்கி என்றால் நண்பன்… திராவிடன் என்றால் திருடன்…” – சீமான் பரபரப்பு பேட்டி
“சங்கி என்றால் நண்பன்… திராவிடன் என்றால் திருடன்…” – சீமான் பரபரப்பு பேட்டி
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழு பேர் உயிரிழந்தது மிக உயரமான சம்பவம், பல மணி நேரத்திற்கு பிறகு தான் அதை சென்று பார்க்கும் நிலை ஏற்பட்டது. அதைவிட மிகக் கொடூரமான விஷயமாகத்தான் இருக்கிறது. இங்கு புவி வெப்பமயமாதல் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. பருவமழை என்பது இனிமேல் இருக்காது; மழை, கனமழை, புயல் மழை என்றுதான் இருக்கும். இதை எதிர்கொள்ள நாம் தயாராக இல்லை என்றால், இப்படிப் புலம்பிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.” என்றார்.
‘எச்.ராஜா மீதான நடவடிக்கை குறித்த கேள்வி பதிலளித்து அவர் பேசுகையில், “அதானி தமிழ்நாட்டிற்கு வரும் பொழுது யாரைப் பார்க்க வந்தார் எனக் கேட்டால் பதில் அளிக்க வேண்டும். அதை விடுத்து ‘பெரிய தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் ஒரு ஆள் இல்லை. அவருக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு வேலை இல்லை’ என பதில் கூறுகிறீர்கள். ‘எச்.ராஜா அவதூறு பேசிவிட்டார்’ எனக் கூறுவதை விடுங்கள். அதைவிட அதிகமாக வலைத்தளங்களில் அவதூறு பரப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அல்லது அவற்றைப் பற்றி அரசுக்குத் தெரியாதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சங்கி தொடர்பான விமர்சனத்திற்கு பதிலளித்து பேசும்போது, “என்னைத் தனிப்பட்ட முறையில் சங்கி எனக் கூறியதற்கு ‘தான் செருப்பைக் கழட்டி அடிப்பேன்’ எனக் கூறினேன். சங்கி என்றால் நண்பன் எனப் புராண காலங்களிலேயே விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாணயம் வெளியிடுவதற்கு மத்திய அரசின் அமைச்சர்களை அழைத்து வருகிறீர்கள், சென்னையில் இருந்து டெல்லி சென்று மத்திய அரசின் தலைவர்களைப் பார்த்து சந்தித்துப் பேசுகிறீர்கள், அப்படி என்றால் திமுகவைச் சார்ந்தவர்கள் எல்லாம் சங்கி இல்லையா?” எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில், “சங்கி என்றால் நண்பன் என்று பொருள்படுகிறது. திராவிடன் என்றால் திருடன் என்று பொருள்படுகிறது. நீங்கள் தமிழ் மக்களை, தமிழ் இனத்தை மறைத்து திராவிடன் திராவிடன் எனக் கூறி வருகிறீர்கள். ‘எனது தந்தையை சங்கி எனக் கூறுவது வருத்தமளிக்கிறது’ எனத் தெரிவித்தார் ரஜினியின் மகள். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் ஏற்கனவே ஆதரவாகப் பேசினேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.
“அனைத்து மாநில முதலமைச்சர்கள் மீதும் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டு முதலமைச்சர் மீது மட்டும் ஏன் மேற்கொள்ளப்படவில்லை?” என சீமான் சந்தேகம் தெரிவித்தார்.
“அரசுப் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்டதற்கு 5 லட்சம் ரூபாய், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இது எந்த மாதிரியான அரசாங்கம்? நாம் கோரிக்கை வைத்தால் மட்டும் இவர்கள் செய்து விடுவார்களா? இந்த நாட்டில் மதிப்பு மிக்க மரணம் என்பது கள்ளச்சாராயம் குடித்து இறப்பதுதான்” எனவும் தமிழக அரசின் மீது குற்றம்சாட்டினார்.
“அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது என்னையும் சேர்த்து அழைத்தார்கள். இவர்களைப் பொருத்தவரையில் சமத்துவம், சமநீதி என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. உங்கள் அரசியலமைப்பு கோட்பாட்டில் இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு எனத் தனி இட ஒதுக்கீடு இருக்கிறதா இல்லையா? அப்படி இருக்கும் பட்சத்தில் அது எப்படி மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியும்?” எனவும் சீமான் விமர்சித்தார்.