இந்தியா
சேறு வீசிய விவகாரம்: “இதை பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை..” – அமைச்சர் பொன்முடி
சேறு வீசிய விவகாரம்: “இதை பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை..” – அமைச்சர் பொன்முடி
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பலர்களின் விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பல கால்நடைகள் வெள்ளத்தால் பலியாகின. அதேபோல், பலரும் வீட்டை இழந்தோ அல்லது கடும் சேதத்திற்கு உள்ளாகியோ இருக்கின்றனர்.
இதன் காரணமாக தமிழ்நாடு உடனடி நிவாரணமாக குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதில், விழுப்புரம் அருகேயுள்ள அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் வசித்தவர்களின் வீடுகளில் புகுந்து மூழ்கடித்தது. இரண்டு தளம் உள்ள வீடுகளின் மாடியில் ஏறி அப்பகுதியினர் தங்களின் உயிர்களை காப்பாற்றிக் கொண்ட நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டவர்கள் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் தங்கினர்.
மீட்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்றவைகள் கிடைக்காததால் ஆத்திரமடைந்தவர்கள் இருவேல்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலின் போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் அப்பகுதிக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆய்விற்கு சென்றார்.
ஆய்விற்கு சென்ற இடத்தில் மக்கள் மறியலில் ஈடுபட்டிருந்ததால் காரில் அமர்ந்தபடியே அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த மக்கள், காரை விட்டு கீழே இறங்கக் கோரி சேற்றை வாரி அடித்தனர். இதனையடுத்து அமைச்சர் பொன்முடி காரை விட்டு கீழே இறங்கி மக்களுக்கு தேவையானதை செய்து தருகிறோம் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் திரும்பினார்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர் பொன்முடியிடம் கேட்டபோது, “விழுப்புரம் இருவேல்பட்டில் என் மீது சேற்றை அடித்தவர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். வேண்டும் என்றே அரசியல் செய்யப் பேசுகிறார்கள்.
என் மீது மட்டுமின்றி ஆட்சியர் பழனி மீதும், கவுதம சிகாமணி எம்.பி. மீதும் சேறு லேசாக பட்டது. எங்கள் நோக்கம் மீட்பு மற்றும் நிவாரணம்தான். இதை பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்தார்.