இந்தியா

திருவண்ணாமலையில் 7 உயிரை காவு வாங்கிய சோகம் – திக் திக் நொடிகள்.. நடந்தது என்ன?

Published

on

திருவண்ணாமலையில் 7 உயிரை காவு வாங்கிய சோகம் – திக் திக் நொடிகள்.. நடந்தது என்ன?

Advertisement

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் ஞாயிற்றுக்கிழமை 4.40 மணியளவில் அபாயகரமான வகையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது. அடிவாரத்தில் வசித்து வந்த மக்கள் சுதாரிப்பதற்குள் சில அசம்பாவிதங்கள் அரங்கேறிவிட்டன. மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் 9வது தெரு பகுதியில் உள்ள குடியிருப்புகள் இந்த மண் சரிவில் சிக்கிக் கொண்டன.

மலையிலிருந்து பாறைகள் மற்றும் சரளை மணல் குவியல்கள் ஒட்டுமொத்தமாக சரிந்து வந்ததில் அடிவாரப் பகுதியிலிருந்த வீடுகள் மீது விழுந்து சிதிலமடைந்தன. சுமார் 40 டன் எடை கொண்ட பெரும் பாறை ஒன்று சரிந்து வந்து அபாயகரமான வகையில் நின்றுள்ளது. மண் சரிவில் சிக்கிய 3 வீடுகளில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்து போனது.

மேலும், 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர். ராஜ்குமார் வீட்டுக்குள் அவர், அவரது மனைவி மீனா, மகன் கவுதம், மகள் இனியா, உறவுக்கார சிறுமிகள் மகா, வினோதினி, ரம்யா என 7 பேர் இருந்தனர். தொடர்ந்து பெய்த கனமழையால், அவர்கள் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர்.

Advertisement

மண் சரிவு ஏற்பட்ட போது ராஜ்குமார் வீட்டருகே இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து அவரது வீட்டு கதவை அடைத்துக் கொண்டுள்ளது. இதனால் அவர்களால் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளனர்.

அதன் பின் சரிந்து வந்த மண் மற்றும் பாறைகள் வீட்டை முற்றிலுமாக மூடியதால் அவர்கள் வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். மண் சரிவு ஏற்பட்ட பிறகு ராஜ்குமாரின் செல்போன் சுமார் ஒரு மணி நேரம் வரை இணைப்பில் இருந்துள்ளது. அதன்பின் ஸ்விட்ச் ஆஃப் ஆகி விட்டது.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்கு மேல் பகுதியில் மிகப்பெரிய ராட்சத பாறை சரியும் நிலையில் அபாயகரமான வகையில் இருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

Advertisement

மண்ணை அப்புறப்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபடும்போது, ராட்சத பாறை சரிந்து விழக்கூடும் என்பதால் அந்தப் பகுதியில் வசித்து வந்த அனைவருமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் இருந்து துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திருவண்ணாமலை வந்தடைந்தனர்.

மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் ரூபி, மிர்ஸி வரவழைக்கப்பட்டன. மேலும், அரக்கோணத்தில் இருந்து ஹைட்ராலிக் ஏர் லிஃப்டிங் பேக், ஹிட்டாச்சி வாகனங்கள் உள்ளிட்டவையும் வரவழைக்கப்பட்டன.

Advertisement

எனினும், அந்த வீடு அமைந்துள்ள பாதை குறுகலாக இருப்பதால் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இரவில் மழை தொடர்ந்து வந்ததாலும், மேலும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததாலும் மீட்பு பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் இணைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக இறங்கினர். அவ்வப்போது கனமழை நீடித்த நிலையிலும், மீட்புப் பணிகள் தொடர்ந்தன.

புதைந்த வீட்டின் அருகே கிடந்த மண் குவியல்களை அப்புறப்படுத்திய மீட்புப்படையினர் முதலில் சிறுவன் கவுதமனின் உடலை மீட்டனர். இதையடுத்து ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகள் இனியா, பக்கத்து வீட்டு சிறுமி வினோதினி ஆகியோர் உடல்கள் மீட்கப்பட்டன. மண்ணும் பாறைகளும் சேர்ந்து இறுகிக் கிடந்த மணல் பரப்புகளை வெட்டி எடுத்த மீட்புப்படையினர் உடல்களை பாகம் பாகமாக மீட்டது அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Advertisement

இச்சூழ்நிலையில் மிகப்பெரிய பாறை ஒன்று இருந்ததால், மீதமுள்ள இருவரின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு, இன்று மீண்டும் தொடங்கப்படுகின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version