இந்தியா
பலவருட கடின உழைப்பு… முதல் பணியில் பொறுப்பேற்க சென்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு நிகழ்ந்த துயரம்!
பலவருட கடின உழைப்பு… முதல் பணியில் பொறுப்பேற்க சென்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு நிகழ்ந்த துயரம்!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் 26 வயதான ஹர்ஷ் பர்தன். 2023-ம் ஆண்டு கர்நாடக கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு சமீபத்தில் பயிற்சி முடிந்தது. இதையடுத்து, கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலநரசிபூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்படி, உதவி காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்பதற்காக பர்தன் ஹாசனுக்குச் சென்று கொண்டிருந்தார். ஹாசன்-மைசூரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் சென்ற காரின் டயர் வெடிக்க, கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் ஹர்ஷ் பர்தன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஹர்ஷ் பர்தனின் தந்தை ஒரு நீதிபதி. சிறுவயது முதலே சிவில் சர்வீஸ் பணி மீது ஆசைப்பட்டு அதற்காக சில வருடங்கள் கடினமாக உழைத்துள்ளார். அவரின் ஆசைக்கேற்ப ஐபிஎஸ் பணியும் கிடைத்துள்ளது.
சமீபத்தில் மைசூரில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் நான்கு வார பயிற்சியை முடித்திருந்தார். தொடர்ந்து தனக்கு கிடைத்த முதல் பணியில் பொறுப்பேற்க சென்றபோது கோர விபத்து நிகழ, ஹர்ஷ் பர்தன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிகழ்வு கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஷ் பர்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, “ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் உயிரிழந்ததை கேள்விப்பட்டு வருத்தமாக இருக்கிறது. தனது முதல் பணியில் பொறுப்பேற்கச் செல்லும் போது இதுபோன்ற விபத்து நிகழ்ந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. பல வருட கடின உழைப்பு பலனளிக்கும் போது இது நடந்திருக்கக்கூடாது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.