இந்தியா
மக்களவையில் பேசிய இந்தியில் பிழை.. திமுக மீது புகார் சொன்ன நிர்மலா சீதாராமன்
மக்களவையில் பேசிய இந்தியில் பிழை.. திமுக மீது புகார் சொன்ன நிர்மலா சீதாராமன்
“எனக்கு இந்தி தெரியாமல் இல்லை, ஆனால் தமிழ்நாட்டில் இந்தி படிக்க விடாமல் செய்ததற்கு திமுகவினர் மீதுதான் புகார் கூற வேண்டும்” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று (3ம் தேதி) வங்கிகள் திருத்த சட்ட மசோதா தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியில் பதில் அளித்தார். அப்போது சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் நிர்மலா சீதாராமன் பேசிய இந்தி தவறாக உள்ளது என குற்றச்சாட்டை வைத்தனர்.
அப்போது நிர்மலா சீதாராமன் ஆவேசமாக, “எதிர்க்கட்சிகள் இந்தி திணிப்பை எதிர்க்கின்றனர். எனக்கு இந்தி தெரியாமல் இல்லை, ஆனால் தமிழ்நாட்டில் இந்தி படிக்க விடாமல் செய்ததற்கு திமுகவினர் மீதுதான் புகார் கூற வேண்டும்.
தமிழை ஐ.நா. சபை வரையும், மீண்டும் மீண்டும் தமிழை மேற்கோள் காட்டியும் ஒரு பிரதமரை காட்டுங்கள். நரேந்திர மோடிதான் இதனை செய்தார். காரணம் அவர் மொழி மீது மரியாதை கொண்டுள்ளார். திமுக கூட்டணி வைத்திருந்த ஒரு பிரதமர் தமிழை மேற்கோள் காட்டியதாக ஒருவரை கூறுங்கள். ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒவ்வொரு மாநில மொழியையும் பிரதமர் மோடி ஊக்குவிக்கிறார்” என பேசினார்.