இந்தியா
மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட இல்லை – மத்திய அரசு விளக்கம்
மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட இல்லை – மத்திய அரசு விளக்கம்
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பலர்களின் விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பல கால்நடைகள் வெள்ளத்தால் பலியாகின. அதேபோல், பலரும் வீட்டை இழந்து கடும் சேதத்திற்கு உள்ளாகியோ இருக்கின்றனர்.
இதன் காரணமாக தமிழ்நாடு உடனடி நிவாரணமாக புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதியாக ரூ. 2000 கோடி தேவை என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், இன்று வெள்ளம் பாதித்த கடலூர் பகுதியில் பார்வையிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “மத்திய அரசு – மாநில அரசு இடையே எப்போதும் வரும் பிரச்சனை பண பங்கீடு. கடந்த 31.10.2024 வரை, 944 கோடி 80 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிதியாக மத்திய அரசு தனது பங்கீடாக, தமிழ்நாடு அரசிற்கு வழங்கியுள்ளது. மாநில அரசு தன் பங்கீடாக ரூ. 315 கோடியை அதில் வைத்துள்ளது. எனவே மொத்தம் மாநில பேரிடர் நிதியில் ரூ. 1,260 கோடி இருக்கிறது.
இது தவிர ஹிமாச்சல், கர்நாடகா, தமிழ்நாடு, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு மட்டும் மாநில பேரிடர் நிதியை தாண்டி தேசிய பேரிடர் நிதியும் மத்திய அரசு கொடுத்துள்ளது. அதில், தமிழ்நாட்டிற்கு 276 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டதும் மாநில அரசு செலவு செய்துவிட்டு பிறகு மத்திய அரசிடம் இருந்து அந்த நிதியை பெறுவது தேசிய பேரிடர் நிதி. மத்திய அரசை பொறுத்தவரை குற்றம் குறை இல்லாமல் நிதி வழங்கியிருக்கிறது” என்று தெரிவித்தார்.
இதே சமயம், மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மாநிலங்களுக்கு இரு தவணையாக மத்திய அரசு தரப்பில் இருந்து நிதி ஒதுக்கப்படும். இதில், தமிழ்நாட்டிற்கு வருடத்திற்கு ரூ. 1,260 கோடியை இரு தவணையாக ஒதுக்க வேண்டும்.
அப்படி 2024-2025 நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுப்பராயன், செல்வராஜ் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்திருக்கிறார். அந்தப் பதிலில், 2024-2025 நடப்பாண்டில் இன்னும் ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படவில்லை என்ற விவரம் வெளிவந்துள்ளது.
இதேபோல், கடந்த 2023ம் ஆண்டு மிக்ஜாம் புயலால் தென் மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்தபோதும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே நிதி ஒதுக்குவது தொடர்பான பிரச்சனை வந்தது. அப்போது, மத்திய அரசு கூடுதலாக நிதி வழங்கியதாக தெரிவித்தது. ஆனால், தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கத்தில், என்.டி.ஆர்.எஃப். நிதியில் இருந்து இதுவரை தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி வழங்கப்படவில்லை. மத்திய அரசு அளித்த ரூ. 450 கோடி என்பது மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழக்கமாக வழங்கும் இரண்டாம் தவணையே தவிர கூடுதல் நிதி அல்ல என தெரிவிக்கப்பட்டது.
தற்போது 2024 – 2025ம் ஆண்டிற்கான மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதி ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை என்ற தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.