இந்தியா
வடியாத வெள்ளம்… குடி தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்!
வடியாத வெள்ளம்… குடி தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்!
“ஊரெல்லாம் தண்ணீ புகுந்துருச்சு… பேங்க்கு புக்குலாம் போவுது… வீட்டு சுவர் இடிஞ்சி விழுந்துருச்சு…” இதெல்லாம் உயிரைப் பிடித்துக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் தப்பித்தால் போதும் என்று தென் பெண்ணையாறு ஓரத்தில் உள்ள கிராம மக்கள் பேசிக்கொண்டு சென்றது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி என தென் பெண்ணையாறு ஓடும் மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் சாத்தனூர் அணை வேகமாக நிரம்பி, 1.80 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் வட மாவட்டங்கள் கடல் போல் காட்சியளிக்கின்றன.
கிளையாறு, மலட்டாறு, கெடிலம் ஆறு மற்றும் ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறியதால் பல கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்தன. 30ஆம் தேதி இரவு புயல் வீசத் தொடங்கியதும் காற்று மழை அதிகமானதால் அன்று இரவு 11 மணிக்கு கரண்ட் கட் ஆனது.
1ஆம் தேதி பகல், இரவு வரை கரண்ட் வரவில்லை. 24 மணி நேரத்திற்கு பிறகு முக்கிய நகரப் பகுதிகளில் த்ரீ பேஸ் லைன் மட்டும் கொடுத்தனர்.
மற்ற கிராமங்களிலும் நகரப்பகுதிகளிலும் மின்சாரம் இல்லாததால் குளிரிலும் கொசுக் கடியிலும் தூங்க முடியாமல் சிரமப்பட்ட மக்கள், குளிக்க குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட காந்தியநகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் கூறுகையில், “கடந்த 30ஆம் தேதி போன கரண்ட், நாலு நாள் ஆச்சு இன்னும் வரல. இதனால் மோட்டாரும் போட முடியல. நகராட்சி தண்ணீரும் வரல..
அவசரத்துக்கு லாரி தண்ணீர வரவழைக்கலாம்னா போன்ல சார்ஜ் இல்லை. சுவிட்ச் ஆப் ஆகி கிடைக்கிறது. ரொம்ப கஷ்டமா இருக்கு. எங்களுக்கு சீக்கிரம் தண்ணியும் கரண்ட்டும், விட சொல்லுங்க… பெரும் உதவியாக இருக்கும்” என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
கடலூர் பணங்காட்டைச் சேர்ந்த சதீஷ், “கோண்டூர், வெளிச்சமண்டலம், நண்பர்கள் நகர், ஹவுசிங் போர்டு, நத்தப்பட்டு போன்ற பகுதிகளில் ரெண்டு நாளா குடி தண்ணீ இல்லாம அவஸ்த்தைப்பட்டுடோம்.
கரண்ட் இல்லாம குழந்தைக தூங்க முடியாம அழுவுறாங்க. என்னோட சொந்தக்காரர் ஒருத்தரு அரசு வேலைல இருக்காரு. கரண்ட் இல்லாம தண்ணீ வராதததால எப்படி டா ஆபீஸ் போறதுனு லீவு போட்டுட்டார்.
கடலூர் ஒன்றிய வெள்ளப்பாக்கத்து இப்ப வர கரண்ட் வரல. சோறு தண்ணீ இல்லாம மக்கள் கஷ்ட படுகிறாங்க” என்றார் .
பண்ரூட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராம ஒன்றியம் பகண்டை கிராமத்தைச் சேர்ந்த மணி கூறுகையில், “எங்கள் ஊர் தென்பெண்ணை ஆத்தோரத்துல இருக்கு. எங்க கிராமம் போல 10 கிராமம் இருக்கு. சொல்லப்போனா முன்னாள் அதிமுக அமைச்சர் சம்பத் வீடும் இங்கிருந்து 10 கிமீ தூரத்துல தான் இருக்கு. அவரு ஊருக்குள்ளவும் தண்ணீர் புகுந்துருச்சு. பகண்டையை சுத்தியிருக்கும் கிராமங்கள்ல இப்ப வர நெஞ்சு வரைக்கும் தண்ணீ தேங்கியிருக்கு. தண்ணீர் குறையவே இல்லை. எங்கள் உடைமைகள கூட எடுத்துட்டு வரல. மாத்து துணி இல்லாம் பெண்கள்லாம் கஷ்டப்படுறாங்க… சொந்த ஊரிலேயே அகதிகளா நிக்கிறோம்.
பாதிக்கப்பட்ட ஜனங்கள சமூதாயக் கூடம், அண்ணாகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில தங்க வச்சிருக்காங்க… எப்ப வீட்டுக்கு போவோமோ… எப்ப தண்ணீ வடியுமோ. தாகத்துக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லை” என்று வேதனைபட்டார்.
விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த சுந்தரி கூறுகையில், “என் கழுத்தளவுக்கு இங்கு தண்ணீ நிக்குது. எங்கள் சொந்தகாரங்கள் வீடுலாம் இடிஞ்சி விழுந்துருச்சு. இந்த மழை காத்துல ஒரு நாள் முழுவதும் இருட்டுல உசுர கையில பிடிச்சுட்டு இருந்தோம். லாரியில் கொண்டு வந்துதான் குடுக்க தண்ணீ கொடுக்குறாங்க. அதுவும் ஒரு வேளைதான். அதற்காக ஊரே போய் நிக்குது. ஒரு குடம் பிடிக்கிறதுக்குள்ள உயிரே போயிடுது. குடிக்கவே தண்ணீர் இல்லை இதில் எங்க போய் குளிப்பது. எங்கள் கஷ்டத்தை யார் பார்ப்பது…. எங்கள் குறையை யார் கேட்பது” என்று புலம்பினார்.
விரைவில் இயல்பு நிலை திரும்ப அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.