இந்தியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்.. பனையூரில் நிவாரணம் வழங்கிய விஜய்

Published

on

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்.. பனையூரில் நிவாரணம் வழங்கிய விஜய்

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 3) நிவாரண பொருட்கள் வழங்கினார்.

புதுச்சேரி அருகே கடந்த நவம்பர் 30ஆம் தேதி இரவு ஃபெஞ்சல் கரையக் கடந்தது. இதனால் புதுச்சேரி, கடலூர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானது.

Advertisement

தொடர்ந்து இந்த புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, தமிழகத்தின் வடமாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனத்தை உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நகர்ந்ததால், அங்கும் பலத்த மழை பெய்தது.

இதனால் திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட மண் சரிவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய், பனையூரில் உள்ள தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை டிபி சத்திரத்தை சேர்ந்த மக்களுக்கு அரிசி உள்பட நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார்.

Advertisement

அவர்களிடம் ” நீங்கள் வசிக்கும் இடத்திற்கே வந்து நிவாரணம் வழங்கியிருக்கலாம். ஆனால் இப்படி உங்களிடம் அமர்ந்து பேசியிருக்க முடியாது. அதனால் தான் உங்களை இங்கு வரவழைத்து நிவாரணப் பொருட்களை வழங்கினேன். நேரில் வந்து தரவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம்” என்று விஜய் அவர்களிடம் கூறினார்.

இதனை தொடர்ந்து நாளை, விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களை தேர்வு செய்து பனையூருக்கு அழைத்துவந்து நிவாரணம் வழங்க உள்ளார் விஜய்.

முன்னதாக வெள்ள பாதிப்பு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ” திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.

Advertisement

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும்.

இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ” என்று விஜய் பதிவிட்டிருந்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version