இந்தியா
Blankets in Trains: இனி 15 நாட்களுக்கு ஒருமுறை கம்பளி போர்வைகள் துவைக்கப்படும் – ரயில்வே உறுதி!
Blankets in Trains: இனி 15 நாட்களுக்கு ஒருமுறை கம்பளி போர்வைகள் துவைக்கப்படும் – ரயில்வே உறுதி!
ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு போர்வை மற்றும் தலையணைகள் வழங்கப்படுகிறது. ஒரு பழுப்பு அல்லது கருப்பு நிற கம்பளி போர்வை, படுக்கை விரிப்பு, ஒரு தலையணை ஆகியவை அடங்கிய தொகுப்பு, ஏசி பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, நாடு முழுவதும் ஓடும் ரயில்களில் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கம்பளி போர்வைகள் பயன்படுத்தப்படுகின்றன. ரயில்களில் பயன்படுத்தப்படும் கம்பளி போர்வைகள், 121 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராவி உருவாக்கும் பெரிய கொதிகலன்களில் 30 நிமிடங்களுக்கு உட்படுத்தப்பட்டு, முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.
2020-ஆம் ஆண்டு வாக்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரயில்களில் கம்பளி விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது முதல் கம்பளிகள் சுத்தமாக இல்லை என்ற புகார்கள் அதிகரித்தது. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ரயில்வே அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது. இதற்கு கிடைத்த பதிலில், படுக்கை விரிப்புகளான வெள்ளைத் துணிகள் ஒவ்வொரு முறை பயன்பாட்டிற்குப் பிறகும் துவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், கம்பளிப் போர்வைகள் அதன் எண்ணிக்கைகள், சலவைக்குக் கொண்டு செல்லும் போக்குவரத்து ஏற்பாடுகளைப் பொறுத்து மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை துவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சில சமயம் கறை அல்லது துர்நாற்றம் ஏற்பட்டால் மட்டுமே துவைப்பதாகவும் ரயில்வே ஊழியர்கள் கூறியது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. இந்த கம்பளி மற்றும் படுக்கை விரிப்புகளுக்கும் சேர்த்துதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கரீப் ரத், துரந்தோ போன்ற ரயில்களில் இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் கம்பளி போர்வைகளின் சுத்தம் குறித்த கேள்வி நாடு முழுவதும் விவாதத்துக்கு உள்ளானது. இது குறித்து மக்களவையில் ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் எம்பி குல்தீப் இந்தோரா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, ரயில் பயணத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறையாவது நன்கு சலவை செய்யப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் தந்திருந்தார்.
முன்பு, தடிமனாக வழங்கப்பட்ட கம்பளியை அடிக்கடி துவைப்பது சவாலாக இருந்ததாகவும், அதற்கு மாற்றாக தற்போது மெல்லிய கம்பளிகளை கொள்முதல் செய்வதாகவும் அவர் விவரித்திருந்தார். சலவை செய்யப்பட்ட கம்பளிகளின் தரத்தை சரிபார்க்க வைட்டோ-மீட்டர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் விவரித்திருந்தார். இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக 15 நாட்களுக்கு ஒருமுறை கம்பளிகள் துவைக்கப்படும் என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சூடான நாப்தலீன் நீராவி மூலம் கம்பளி போர்வைகள் கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும், சில ரயில்களில் UV ரோபோடிக் முறையில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கு ரயில்வே உள்பட மற்ற மண்டலங்களில் கம்பளிகளின் சுகாதாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, மற்ற மண்டலங்களும் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன