விளையாட்டு
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்…கிரிக்கெட்டுக்கு முழுக்கு… யார் இந்த ஆர்யமான்?
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்…கிரிக்கெட்டுக்கு முழுக்கு… யார் இந்த ஆர்யமான்?
புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவரான குமார் மங்கலம் பிர்லாவின் மகனும், கிரிக்கெட் வீரருமான ஆர்யமான் பிர்லா 22 வயதிலேயே , கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்றவர்களின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கலாம். வெளிநாடுகளில் கால்பந்து , கூடைப்பந்து , குத்துச் சண்டை போன்ற போட்டிகளில் ஜாம்பவான்களாக திகழும் பல வீரர்களின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடியில் இருக்கலாம். உலகத்தில் எத்தகைய விளையாட்டு வீரர்களையும் விட பணக்கார விளையாட்டு வீரர் இந்தியாவில்தான் இருந்தார் என்பது பலரும் அறியாதது. அந்த பணக்கார விளையாட்டு வீரர்தான் ஆர்யமான் பிர்லா. இவர், பல்வேறு நிறுவனங்களை நடத்தும் பிர்லா குழுமத்தின் உரிமையாளரான குமார் மங்கலம் பிர்லாவின் மகன்.
ஆர்யமான், 9 முதல் தர போட்டிகளில் ஆடி, 414 ரன் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்துள்ளார். கடந்த 2017-18 ஆண்டுகளில் ரஞ்சி கோப்பைக்காக, மத்தியப்பிரதேச அணிக்காக இவர் ஆடியுள்ளார். 2018 ஆம் ஆண்டு சி.கே.நாயுடு கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடிய ஆர்யமான் 795 ரன் எடுத்திருந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது, ஆர்யமானை 30 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது. எனினும், அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாடவில்லை. சொந்த காரணங்கள் காரணமாக சொல்லப்பட்டது. வேறு எந்த ஐ.பி.எல் தொடரிலும் அவர் களம் இறங்கவில்லை.
இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆர்யமான் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் முன், குடும்ப பெயரை வைத்து மக்கள் அறிந்திருந்தனர். கிரிக்கெட் விளையாடி எனக்கென ஒரு பெயரை பெற்றுள்ளேன். இதுதான் எனது வாழ்நாள் சாதனை’ என்றார்.
ஆர்யமான் பிர்லா தற்போது ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரிடெய்ல் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
சின்னதிரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் பரிதாப மரணம்… மகளின் உருக்கமான பதிவு!
ரஹ்மான் ரூட்டில் தயாரிப்பாளர் சங்கம்… யூடியூப் ரிவ்யூவர்ஸுக்கு செக்!