உலகம்

போர் நிறுத்தத்துக்கு இடையே லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் 11 பேர் சாவு!

Published

on

போர் நிறுத்தத்துக்கு இடையே லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் 11 பேர் சாவு!

 காசாவில் ஒரு போதும் இல்லாத அளவில் உணவை பெற முடியாத நிலை

லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மத்தியிலும் இஸ்ரேல் அங்கு தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் அரச பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பதினொருவர் கொல்லப்பட்டிருப்பதோடு காசாவில் இடம்பெற்று வரும் சரமாரித் தாக்குதல்களில் மேலும் பலர் பலியாகியுள்ளனர்.

Advertisement

கடந்த வாரம் எட்டப்பட்ட போர் நிறுத்தத்தை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் கடந்த திங்களன்று இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பதிலடியாக இஸ்ரேலிய இராணுவ நிலை மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதை அடுத்து குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் தொடர்ச்சியாக மீறப்படும் நிலையில் ஆரம்பக்கட்ட பதில் நடவடிக்கையாக லெபனானும் உரிமை கோரும் சர்ச்சைக்குரிய கிபர் சௌபா மலைகளில் இஸ்ரேலிய இராணுவத் தளம் ஒன்றை தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.

Advertisement

கடந்த புதன்கிழமை அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறி வருவதாகவும் இதில் லெபனான் எங்கும் வான் தாக்குதல்கள், தெற்கில் பொதுமக்கள் மீது சூடு நடத்துவது மற்றும் லெபனான் வான் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஜெட்கள் வட்;டமிடுவது போன்ற செயல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாகவும் ஹிஸ்புல்லா கூறியது. இந்த மீறல்களை நிறுத்தும்படி குறித்த நிர்வாகங்களை அறிவுறுத்தியபோதும் அது வெற்றி தராத நிலையிலேயே ‘எச்சரிக்கும்’ தாக்குதல்களை நடத்தியதாக அந்த அமைப்புக் கூறியது.

எவ்வாறாயினும் ஹிஸ்புல்லாவின் ஆரம்பக் கட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்திய நிலையில் ஹிஸ்புல்லா அதற்கு பதில் அளிக்கவில்லை. இதன்போது பல விமானத் தாக்குதல்களையும் நடத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களுக்கு கடுமையாக பதிலளிக்கப்படும் என்றும் எச்சரித்தது.

இந்தத் தாக்குதல்களில் தெற்கு லெபனானின் ஹரிஸ் பகுதியில் ஐவரும் டலவுசா பகுதியில் நால்வரும் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு கூறியது.

Advertisement

காசா போரை ஒட்டி கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நீடித்து வந்த இஸ்ரேலுடனான மோதலில் சுமார் 4,000 லெபனானியர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டது. எனினும் இந்த மீறல்கள் போர் நிறுத்தத்தை பலவீனப்படுத்தி வருகிறது.

முன்னதாக தெற்கு மாவட்டமான நபட்டியேவில் இஸ்ரேலின் ரொக்கெட் தாக்குதல் ஒன்றில் லெபனான் அரச பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரி மஹ்தி கிரைஸ் கொல்லப்பட்டதாக அந்த நிறுவனம் கடந்த திங்கட்கிழமை கூறியது. இதனை போர் நிறுத்தத்தின் ஓர் ‘அப்பட்டமான மீறல்’ என்றும் தாக்குதல்கள் அபாயகரமான முறையில் அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் எச்சரித்தது. இஸ்ரேலிய குண்டுவீச்சில் மர்ஜயூன் பகுதியில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் வடகிழக்கில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் லெபனான் இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

காசாவிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் சூழலில் வடக்கே காசா நகரில் உள்ள நான்கு மாடி கட்டடம் ஒன்று நேற்று அழிக்கப்பட்டது. இதன் இடிபாடுகளில் பலரும் சிக்கி இருக்கலாம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உயிர்தப்பியவர்களை தேடுவதில் சிவில் பாதுகாப்பு தரப்பினர் பொதுமக்களுக்கு உதவி வருகின்றனர். வடக்கு நகரான பெயித் லஹியாவில், பொதுமக்கள் குழு ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் காயமடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு தொடக்கம் நேற்றுக் காலை வரை இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசாவில் தரை, கடல் மற்றும் வான் வழியான இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 44,466 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 105,358 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, காசாவில் பஞ்சம் பரவுவதை தடுக்கவும் அவசர உதவி விநியோகத்திற்கும் கட்டுப்பாடற்ற மற்றும் பாதுகாப்பான வழிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பேத் பெச்டோல் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

‘காசா முழுவதும் தற்போது உணவு கிடைப்பது ஒருபோதும் இல்லாத அளவுக்கு குறைவாகி இருப்பதோடு உணவு விநியோகம் வேகமாக குறைந்துள்ளது’ என்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமைச்சர்கள் மாநாடு ஒன்றில் பேசும்போது பெச்டோல் குறிப்பிட்டுள்ளார்.

உதவிகளை விநியோகிப்பதற்கான வழிகள் நாளைக்கு அன்றி இன்றைக்கு இப்போதே ஏற்படுத்தப்பட வேண்டும். உணவு, மருந்து மற்றும் எரிபொருள் மறுக்க முடியாத முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதாக இருந்தபோதும் உள்ளூர் மட்டத்தில் உணவு உற்பத்தித் திறனுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். அது உயிர்வாழ்வதற்கான தேவையாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

காசாவில் இஸ்ரேலின் போருக்கு முன்னர் அந்தப் பகுதி மரக்கறிகள், முட்டைகள், பால், கோழி மற்றும் மீன் உற்பத்திகளில் தன்னிறைவு பெற்றிருந்ததாக உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

எனினும் ஓர் ஆண்டுக்கு மேலாக நீடிக்கும் போரினால் காசாவில் விவசாயக கட்டமைப்பு முறிந்திருப்பதோடு இஸ்ரேலியப் படையினால் உள்ளூர் உணவு உற்பத்திகள் அழிக்கப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version