இந்தியா
“மத்திய அரசு இடஒதுக்கீட்டை முறையாக கடைப்பிடிப்பதில்லை” – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
“மத்திய அரசு இடஒதுக்கீட்டை முறையாக கடைப்பிடிப்பதில்லை” – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
அகில இந்திய சமூக நீதி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பாஜக அரசு விரும்பாததால், இடஒதுக்கீட்டை முறையாக கடைப்பிடிப்பதில்லை என சாடினார். மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சமூக ரீதியாக, கல்வி ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மக்களை கைதூக்கி விடுவதுதான் சமூக நீதி. ஏழை, எளிய மக்களுக்கு பொருளாதார உதவி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை.
ஆனால், சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு பொது பிரிவினருக்கும் வழங்குவதை தான் எதிர்க்கிறோம். எனவே, 50 விழுக்காடு என்ற இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்” எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசும்போது, “மகளிர் இடஒதுக்கீட்டை தடுத்து சதி செய்தது போல சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும் பாஜக அரசு முன்வரவில்லை. 2021-ம் ஆண்டே எடுக்கப்பட்டு இருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஒன்றிய பாஜக அரசு உடனே தொடங்க வேண்டும். அதோடு சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.
இதனை செயல்படுத்த பாஜக அரசு மறுக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், அதனை கொண்டு உண்மையான சமூக நீதியை வழங்க வேண்டி இருக்கும் என்பதால் பாஜக அரசு தயங்குகிறது. எனவே, இடஒதுக்கீடு மாநில அரசுகளின் வரம்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு முறையாக கடைப்பிடிப்பதில்லை” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.