சினிமா
இசையமைப்பாளர் ஆதித்யனை நினைவூட்டும் ‘ரோஜா மலரே’ பாடல்கள்!
இசையமைப்பாளர் ஆதித்யனை நினைவூட்டும் ‘ரோஜா மலரே’ பாடல்கள்!
’விக்ரம்’ படத்தில் ஒரு காட்சியில் ‘சக்கு சக்கு பத்திகிச்சி’ பாடல் வந்தபிறகு, அதனைத் தேடித் தேடிக் கேட்பவர் எண்ணிக்கை அதிகமானது. 1995-இல் வெளியான ‘அசுரன்’ படத்திற்காக அதனைத் தந்தவர் இசையமைப்பாளர் ஆதித்யன்.
அமரன் தொடங்கி நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கிமேன் என்று அவர் பல படங்களில் ஹிட் பாடல்கள் தந்திருக்கிறார். அவற்றில் ஒன்றாக விளங்குகின்றன ‘ரோஜா மலரே’ படப் பாடல்கள்.
ஒலி வடிவமைப்பாளராகத் திரையுலகில் தனது வாழ்வைத் தொடங்கியவர் ஆதித்யன். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் சமையற்கலை வல்லுநராகவும் ஓவியராகவும் கூட அவர் அறியப்படுகிறார்.
ஆதித்யன் இசையில் அமைந்த பாடல்களில் பல, காலம் கடந்து தற்போது பலரால் கொண்டாடப்படுகின்றன.
செயற்கைக்கோள் தொலைக்காட்சி யுகத்தின் வளர்ச்சி தமிழகத்தில் தொடங்கிய காலகட்டத்தில் திரும்பத் திரும்ப ’ரோஜா மலரே’ படப் பாடல்கள் நம் விழியிலும் செவியிலும் நுழைந்தன. நல்லனுபவத்தைத் தந்தன. அந்த இனிமையான காலகட்டத்தை நினைவூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பினைத் தருகிறது இப்படத்தின் இசை.
மென்மையான இறகின் வருடலைப் போன்று முதன்முறையாகக் காதலை உணர்வது, அதனை இணையிடம் தெரிவிக்காமல் மனதுக்குள்ளேயே மருகுவது, காதலி வேறு திசையில் சென்றதைப் பொறுக்கமாட்டாமல் வேதனையில் துடிப்பது என்று தவிக்கிற பாத்திரமாக, சுமார் ஒரு டஜன் படங்களிலாவது நடிகர் முரளியைப் பார்த்திருப்போம். அவற்றில் ஒன்றாக உள்ளது ‘ரோஜா மலரே’.
தொண்ணூறுகளில் வந்த படங்களைப் போன்றே, இதிலும் முரளியைச் சுற்றி மூன்று நண்பர்கள் உண்டு. விளக்குத்திரியைத் தூண்டி விடுவதைப் போன்று நாயகனின் காதலை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதே அவர்களது முழுநேர வேலை.
ஆனந்த்பாபு, மதன்பாப், செந்தில் அந்த பாத்திரங்களில் தோன்றியிருக்கின்றனர். முரளிக்கு இணையான பாத்திரம் இல்லை என்றபோதும், படம் முழுக்க ஆனந்த் பாபுவுக்கு இப்படத்தில் தனியாக வசனங்கள், ஷாட்கள் உண்டு.
மகன் மனம் புண்படுவதைத் தாங்க முடியாமல் வேதனைப்படுவது அவரது தாயின் வேலை. சத்யபிரியா அதனைச் செவ்வனே செய்திருக்கிறார்.
இவர்களுக்கெல்லாம் வேலை தருவது போல, நாயகன் மனதில் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது ரீவா பப்பர் ஏற்ற நாயகி பாத்திரம்.
ஒரு கதையில் பிரச்சனை இருந்தால் தானே திருப்பங்களும் உணர்வெழுச்சிகளும் நிகழும். அதற்கேற்ப’ என் வழி தனி வழி’ என்று நாயகனாகவும் இல்லாமல், வில்லனாகவும் இல்லாமல் ‘ஆன்ட்டி ஹீரோ’வாக ஒருவர் இப்படத்தில் வருகிறார். அவர் வேறு யாருமல்ல, அருண் பாண்டியன் தான்.
தமிழில் நாயகனாக நடித்து வந்த காலகட்டத்தில், அவரை வில்லனாகக் காட்டியது ‘ரோஜா மலரே’.
இப்படத்தின் கதை மிகச் சிறியது. ஒரு பஸ் டிக்கெட்டில் எழுதிவிடக் கூடியது. அதன் காரணமாக ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, கேசவனின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகளின் சிறப்பு இதில் அதிகம் வெளிப்பட்டிருக்கும்.
மிக முக்கியமாக, ஆதித்யனின் இசையைப் படம் முழுக்க நிறைத்திருப்பார் இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன். அவர் இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட.
’ரோஜா மலரே’ படக் காட்சிகளையும் கதாபாத்திர ஆக்கத்தையும் கண்டபோது, தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வெளியாகியிருந்தால் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்ற எண்ணமே ஏற்பட்டது.
முழுமையாக ஒரு ‘மியூசிகல் பிலிம்’ ஆக அறிந்திருக்கப்பட வேண்டிய திரைப்படம் ‘ரோஜா மலரே’. அதற்கேற்ப இப்படத்தில் பாடல்களுக்கான சூழலும் திரைக்கதையில் அமைக்கப்பட்டிருக்கும்.
கூடவே, கதையில் முக்கியப் பாத்திரங்கள் இசை வாத்தியங்களை மீட்டிப் பயிற்சி செய்வது, புதிய தேடலில் ஈடுபடுவது காட்சியின் மையமாகவோ அல்லது தொடக்கமாகவோ இதில் இடம்பெற்றிருக்கும்.
’ரோஜா மலரே’ படத்தில் ஏழு பாடல்கள் இருக்கின்றன. அனைத்தையும் இயக்குனர் ஜெயமுருகனே எழுதியிருக்கிறார்.
அப்பாடல்களில் முதன்மை இடம் பெறுகிறது ‘ஆனந்தம் வந்ததடி ஆனந்தி’. தொண்ணூறுகளின் இறுதியில் ஹிட் ஆன மெலடி மெட்டுகளில் இதற்குத் தனியிடம் உண்டு.
மது அருந்திவிட்டு காதல் தத்துவங்களை உதிர்ப்பதாக அமைந்த வகையில், ’கேட்டவரம் கிடைக்கலை’ ஆனது இன்றைய போதையிசைப் பாடல்களுக்கான முன்னோடிகளில் ஒன்று எனலாம்.
அது மட்டுமல்லாமல் ‘பம்பாய் ரீவா’ என்ற குத்து பாடல் என இப்படத்தில் மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார் மனோ.
‘அழகோவியம் உயிர் ஆனது’ பாடல், வழக்கமான திரையிசையில் இருந்து மாறுபட்டு சுண்டியிழுக்கும் வகையில் அமைந்தது. இது போக மென்சோகம் இழையோட உருவாக்கப்பட்ட ‘பூ பூப்பூவா பூ பூத்தது’ பாடலையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பார்.
மேற்சொன்ன பாடல்கள் அனைத்தும் எழுபதுகள், எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் வந்த இந்திப்பட பாடல்களின் சாயலைக் கொண்டிருப்பது தற்செயலா எனத் தெரியவில்லை.
ஜீமோன் குரலில் அமைந்த ‘ரோஜா மலரில் நேசம் கொண்டு’ பாடலைக் கேட்டவுடன், கேரள, கர்நாடக, தமிழக ரசிகர்கள் தத்தமது வட்டாரத்திலுள்ள கிராமப்புற சாயலை உணர்வது உறுதி.
‘ஓ மதி’ எனும் பாடல் நம்மைச் சோகக்குளத்தில் தள்ளிவிடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
இது போக, சத்யப்ரியா பாடுவதாக ‘ஓம் கணபதியே சரணம்’ என்ற சிறு பாடலும் இதிலுண்டு.
’ரோஜா மலரே’ வெளியாகி 27 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைய தலைமுறையும் உணரும் வகையில் இப்படத்தின் பாடல்கள் தாக்கம் ஏற்படுத்துவது ஆச்சர்யம் தான்.
இப்படத்திற்குப் பிறகு தான் இசையமைத்த இரண்டு படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன்.
இதன் நாயகி ரீவா பப்பர் தற்போது திருமணப் படங்கள் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். அதற்காகத் தனி நிறுவனமொன்றையும் நடத்தி வருகிறார்.
இப்படத்தில் பங்கேற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களில் பலர் தங்களது ஓய்வுக்காலத்தை அனுபவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல், இப்படம் சம்பந்தப்பட்டவர்களும் நினைவுகூரத்தக்க ஒரு பிணைப்புச் சக்தியாக விளங்குகிறது மறைந்த இசையமைப்பாளர் ஆதித்யன் தந்த பாடல்கள்.