இந்தியா

இளம் மேயர் முதல் முதல்வர் வரை : யார் இந்த தேவேந்திர ஃபட்னாவீஸ்?

Published

on

இளம் மேயர் முதல் முதல்வர் வரை : யார் இந்த தேவேந்திர ஃபட்னாவீஸ்?

கவுன்சிலர், மேயராக தனது அரசியல் பயணத்தை தொடங்கி மூன்றாவது முறையாக முதல்வராகியிருக்கிறார் தேவேந்திர ஃபட்னாவீஸ்.

2014-ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 122 இடங்களை பெற்றது. அப்போதுதான் பாஜக தலைமையில் மராட்டியத்தில் முதன்முறையாக ஆட்சியமைந்தது.

Advertisement

முதல்வராக 44 வயதான தேவேந்திர ஃபட்னாவீஸ் நியமிக்கப்பட்டார். 2019 வரை முழுமையாக ஆட்சி செய்தார். மகாராஷ்டிராவில் முழுமையாக ஆட்சி செய்த இரண்டாவது முதல்வர் என்ற பெருமையை பெற்றார்.

2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் பதவியை பாஜக விட்டுதராததால், அப்போதைய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிரிந்து சென்றார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் மற்றும் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஃபட்னாவீஸ் முதல்வர் ஆனார். ஆனால் பதவியேற்று 5 நாட்களில் ஆட்சி கவிழ்ந்ததால் வெறும் 80 மணி நேரம் மட்டுமே முதல்வர் பதவியில் இருந்தார்.

Advertisement

தொடர்ந்து உத்தவ் தாக்கரே முதல்வரான நிலையில் 2022ஆம் ஆண்டு சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர். இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.

மகாராஷ்டிராவில் கோலோச்சியிருந்த சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரை உடைத்து அந்த கட்சியில் இருந்த முக்கிய தலைவர்களை தங்கள் கட்சியில் இணைத்து ஏறத்தாழ 2 ஆண்டுகளாக பாஜக செய்த அரசியல் ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகளையும் திரும்பி பார்க்க வைத்தது.

குறிப்பாக அங்கு நடந்த அரசியல் பிரச்சினைகளை பலரும் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியோடு ஒப்பிட்டு பேசினர்.

Advertisement

அப்போது, ஃபட்னாவீஸ் துணை முதல்வர் பதவிக்கு இறக்கப்பட்டார்.

பின்னடைவைச் சந்தித்த ஃபட்னாவீஸ், ’நான் ஒரு பெருங் கடலை போன்றவன் நிச்சயம் திரும்பி வருவேன்’ என்று கூறினார்.

ஆனால் உத்தவ் தாக்ரே மற்றும் அவரது கட்சியினரால் விமர்சனங்களுக்கு உள்ளான ஃபட்னாவீஸ் , சக்கரவீயூகத்தால் வீழ்த்தப்பட்டார் என்றும் கூறப்பட்டார்.

Advertisement

மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவின் பாஜக தோல்வியை சந்தித்தது. ஃபட்னாவீஸ் தலைமையில் பாஜக சந்தித்த மிகப்பெரிய தோல்வியாகவும் பார்க்கப்பட்டது.

இதன்காரணமாக ஃபட்னாவீஸின் அரசியல் முடிந்துவிட்டதாகவும் மகாராஷ்டிரா அரசியலில் பேசப்பட்டது. ஃபட்னாவிஸும் தோல்விக்கு பொறுப்பேற்று தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்.

அவரிடம் பாஜக தலைமை பேசி சமரசம் செய்தது.

Advertisement

இந்தநிலையில் 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் களத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது சக்கரவியூகத்தை உடைத்து எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்று எனக்குத் தெரியும். நான் ஒரு நவீன அபிமன்யூ என்று ஃபட்னாவீஸ் கூறியிருந்தார்.

அதை தேர்தல் முடிவிலும் நிரூபித்து காட்டினார். மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 132 இடங்களில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது.

ஆனால் தேர்தல் முடிவு கடந்த 23ஆம் தேதி வெளியானாலும், யார் அடுத்த முதல்வர் என்ற இழுபறி 10 நாட்களாக நீடித்தது.

Advertisement

மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க முக்கிய காரணமாக இருந்த ஃபட்னாவீஸுக்கு தான் முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், ஷிண்டே தலைமையில் தேர்தலை எதிர்கொண்டதால் அவரைத்தான் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் குரல் கொடுத்தனர்.

இந்தநிலையில், மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகிய மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று (டிசம்பர் 4) மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர ஃபட்னாவீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வர் பதவியை வசப்படுத்திக்கொண்டார் .

நாக்பூரைச் சேர்ந்தவர் ஃபட்னாவீஸ் . இவரது தந்தை கங்காதர் ஃபட்னாவீஸ் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர். எமர்ஜென்சி காலத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கங்காதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த கோபத்தில் இந்திரா கான்வென்ட்டில் படிக்கமாட்டேன் என்று அடம் பிடித்த தேவேந்திர ஃபட்னாவீஸ் , அந்த பள்ளியில் இருந்து நின்று நாக்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்தார்.

Advertisement

அதன் பின் மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற ஃபட்னாவீஸ், தொழில் மேலாண்மையில் முதுகலை பட்டமும் பெற்றார்.

மாடலிங்காக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கிய ஃபட்னாவீஸ், 22 வயதில் நாக்பூர் கவுன்சிலராக கால் பதித்தார். 1997ல் நாக்பூர் மேயர் ஆனார். நாட்டிலேயே இளம் மேயர் என்ற பெயர் பெற்றார். 1999ல் முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார்.

அதைத்தொடர்ந்து பாஜகவில் தீவிரமாக செயல்பட்ட ஃபட்னாவீஸை 44 வயதில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் முதல்வர் ஆக்கினர். மகாராஷ்டிராவில் சரத்பவாரை தொடர்ந்து இளம் வயதில் முதல்வர் ஆனது தேவேந்திர ஃபட்னாவீஸ்தான்

Advertisement

மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலத்தை நடத்தும் அனுபவம் ஃபட்னாவிஸுக்கு இருக்கிறதா என்று பலரும் அப்போது கேள்விகளை எழுப்பினர். அவர் தடுமாறுவாரா என்று காண காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் சிலர் காத்திருந்தனர்.

ஆனால்,மேக் இன் இந்தியா மாநாடு நடத்தி, 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,603 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது அவரது ஆட்சிக்காலத்தில். ஆட்டோமொபைல், மின்னணுவியல், உள்கட்டமைப்பு, வேளாண் – தொழில்துறை எனப் பல துறைகளில் இம்முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன.

2018-இல் மீண்டும் மேக்னடிக் மகாராஷ்டிரா என்ற முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, ரியல் எஸ்டேட், நகைகள்- ரத்தினங்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த துறைகளில் 12 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் செய்தார்.

Advertisement

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான சுதிர் முங்கண்டிவார், “ஃபட்னாவீஸ் ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிராவிற்கு உள்நாட்டு மற்றும் அந்நிய நேரடி முதலீடுகள் பெருகின” என்கிறார்.

மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தை கையாண்டதிலும் தனது சாமர்த்தியத்தை வெளிப்படுத்தினார் ஃபட்னாவீஸ். தொடர் போராட்டங்கள், தற்கொலைகள் நடந்துகொண்டே இருந்தன. ஒருகட்டத்தில் ஃபட்னாவிஸை மாற்றிவிடலாம் என்று டெல்லி தலைமை கருதியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் மராத்தா தலைவர்களை அழைத்துப் பேசினார் ஃபட்னாவீஸ். சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரிவில் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் அதை ஃபட்னாவிஸ் அரசு அமல்படுத்தினாலும், அது நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டது. எனினும், அது இந்தத் தேர்தலிலும் பாஜகவுக்கு கை கொடுத்தது.

Advertisement

எப்போதும் கட்சிக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்தார் ஃபட்னாவீஸ். அப்படிதான் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டு, தனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்த போது கட்சிக்காக தன்னை தாழ்த்திக்கொண்டார்.

இந்நிலையில் தான் நாடாளுமன்றத் தேர்தலின்போது தனது நம்பிக்கைக்கு உரியவராக ஃபட்னாவீஸ் இருப்பதை மோடி உணர்த்தினார். ‘மகாராஷ்டிராவிற்கு நாக்பூர் வழங்கிய பரிசு பட்னாவீஸ்’ என்று தேர்தல் பரப்புரைகளின்போது கூறினார் மோடி.

இப்படி கட்சிக்காக எந்த நிலையிலும் தன்னை தாழ்த்திக்கொண்டு, பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நம்பிக்கைகுறியவராக இருந்து வந்த ஃபட்னாவீஸ் மீண்டும் முதல்வராக்கப்பட்டுள்ளார்.

Advertisement

நான் பெருங்கடல்… மீண்டும் நிச்சயம் திரும்பி வருவவேன் என்று கூறியதை மெய்பித்து காட்டியிருக்கிறார் ஃபட்னாவீஸ்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version