இந்தியா
எத்தனை நாட்கள் காக்கி உடையில் இருப்பீர்கள், அதன்பின் இறங்கி தானே ஆக வேண்டும் – சீமான் ஆவேசம்
எத்தனை நாட்கள் காக்கி உடையில் இருப்பீர்கள், அதன்பின் இறங்கி தானே ஆக வேண்டும் – சீமான் ஆவேசம்
ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் கலந்து கொண்டார். அந்த நிகழ்வின் மேடையில் பேசிய எஸ்.பி. வருண்குமார், “நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சியினால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14 சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “இந்திய அரசியலமைப்பின்படி பதிவு செய்யப்பட்ட கட்சி இது. 13 ஆண்டுகளாக மக்களை சந்தித்து தேர்தலில் நின்று வருகிறோம். தனித்து நின்று போட்டி போட்டு 36 லட்சம் வாக்குகள் பெற்ற கட்சியை, பிரிவினைவாத இயக்கம், கண்காணிக்க வேண்டும் என சொன்னார் எஸ்.பி. வருண்குமார் தான் நாட்டை ஆளுகின்றாரா? தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்ததே, அப்பொழுது பிரிவினை இயக்கம் என்பது தெரியாதா?. அடிப்படை தகுதியே இல்லாமல் வருண்குமார் எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆனார்?. உண்மையில் வருண்குமார் தாய் மொழி எது. தமிழ் தாய்க்கும், தந்தைக்கும் பிறந்திருந்தால் தமிழ் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை சொல்லி இருப்பாரா?
இந்த காக்கி உடையில் எத்தனை வருடம் இருப்பாய்.. ஒரு 50 வருடம். அதன்பின்னர் இறங்கி தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயேதான் இருப்போம். பார்த்து பேச வேண்டும். வேலையில் சேர்ந்து உறுதிப்பிரமாணம் எடுத்த பொழுது இப்படித்தான் எடுத்தாரா? என் கட்சியை குறை சொல்வதற்காக ஐபிஎஸ் ஆனாரா?. மோதுவோம் என்றாகி விட்டது.. வா மோதுவோம்” என்று காட்டமாக பேசினார்.
முன்னதாக, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்த குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், “மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பதை எப்படி குறை சொல்ல முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என இருக்கும்பொழுது அதை பாராட்டித்தானே ஆக வேண்டும். எல்லாத்தையும் திட்டிக்கொண்டே, குறை சொல்லிக் கொண்டே இருப்பதற்கு நாங்கள் என்ன மன நோயாளியா?. சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு” என்று கூறினார். அசாமில் மாட்டிறைச்சி தடை குறித்து பேசியவர், “மாட்டு கறியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. ஏன் ஏற்றுமதி செய்கின்றனர். மாட்டு கறிக்கு தடை என்பது கேவலமானது” என்றும் சீமான் கூறினார்.