இலங்கை
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் காணி பிடிப்பு!
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் காணி பிடிப்பு!
மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம் பெற்று வருவதாக மொட்டின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் நாமல் ராஜபக்ஷவின் பெயரை பயன்படுத்தி காணி பிடிப்பது,கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று நாங்கள் விசாரிப்பது வழமை. அப்படி ஒரு வீட்டுக்கு சென்ற நிலையில் , எனக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வந்தது.
இதன்போது மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்ட வேளை , நாங்கள் சென்று கலந்துரையாடிய பாதிக்கப்பட்டவர்கள் எமக்கு எவ்வாறான முறைப்பாடுகளை அல்லது குற்றச்சாட்டுகளை வழங்கினார் என பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தினேன்.
எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி இப்படியான மோசடிகள் செய்பவர்கள் தொடர்பாக மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய வேண்டும். அப்படி ஏதாவது உங்களுக்கு பயம் இருந்தால் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
நாங்கள் யாழ்ப்பாணத்தில் முழு நேர அரசியலில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறோம்.
கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தான் எமது கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாமல் ராஜபக்ச வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றார், நாமல் ராஜபக்ச தங்கம் வியாபாரம் செய்கிறார் போன்ற பொய்யான தகவல்களை சிலர் பரப்பி மோசடிகளை செய்து வருகின்றனர்.
இப்படியானவர்களை மக்கள் நம்ப வேண்டாம். எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி இவ்வாறு குற்றச் செயல்களை செய்கிறவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மொட்டின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் கூறினார்.