இந்தியா
முன்னாள் துணை முதல்வரை சுட்டுக் கொல்ல முயற்சி.. பஞ்சாபில் பரபரப்பு சம்பவம்
முன்னாள் துணை முதல்வரை சுட்டுக் கொல்ல முயற்சி.. பஞ்சாபில் பரபரப்பு சம்பவம்
பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2017 வரை சிரோமணி அகாலி தளம் ஆட்சியில் இருந்தது. அப்போது பிரகாஷ் சிங் பாதல் முதலமைச்சராகவும், 2009- ஆம் ஆண்டு முதல் அவரது மகனான சுக்பிர் சிங் பாதல் துணை முதலமைச்சராகவும் இருந்தனர். 2015 ஆம் ஆண்டு, சீக்கியர்களின் முக்கிய குருவான குருகிரந்த் சாகிப்பின் தியாகம் குறித்து அவதூறாகப் பேசியதாக தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீர் ராம் ரஹீம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், ஆட்சியில் இருந்த அகாலி தளம் கட்சி, குர்மீர் ராம் ரஹீமுக்கு மன்னிப்பு வழங்கியது. இதையடுத்து சீக்கிய அமைப்பின் தலைவரான ஜாதேதார் கடந்த 2 ஆம் தேதி பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோருக்கான தண்டனையை அறிவித்தார். பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்த நிலையில், “சீக்கிய சமூகத்தின் பெருமை” என அவருக்கு அளிக்கப்பட்ட பட்டம் திரும்பப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவரது மகனான சுக்பீர் சிங் பாதல் மதரீதியாக குற்றமிழைத்தவர் என அறிவிக்கப்பட்டார். தனது தவறை ஒப்புக் கொண்ட சுக்பீர் சிங் பாதல் தண்டனையையும் ஏற்க சம்மதித்தார். இதையடுத்து டாங்கா எனப்படும் மத ரீதியான தண்டனையும் சுக்பீர் சிங் பாதலுக்கு வழங்கப்பட்டது.
சுக்பீர் சிங்-க்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், கழிவறை சுத்தம் செய்வது போன்ற தண்டனை அல்லாமல், பாதுகாவலருக்கான உடையை அணிந்து அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. மேலும், “நான் பாவி” என்பதை குறிக்கும் வகையிலான அட்டையையும் கழுத்தில் அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. அவருடன் முன்னாள் அமைச்சர்கள் Sukhdev Dhindsa உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது. இதுதவிர 7 பேர் கழிவறைகளை கழுவவும், கோயில்களில் பாத்திரங்களை கழுவவும் தண்டனை விதிக்கப்பட்டது.
Also Read :
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் கான்ஸ்டேபிள்..! தங்கை என்றும் பாராமல் கொலை செய்த அண்ணன்..
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையின்படி சுக்பீர் சிங் பாதல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் செவ்வாய்க்கிழமை தனது காவல் பணியை தொடங்கினார். மற்றவர்கள் கழிவறைகளை தூய்மைபடுத்தும் பணியிலும் பாத்திரங்களை கழுவியும் தண்டனையை நிறைவேற்றினர். சுக்பீர் சிங் பாதல் இரண்டாவது நாளாக காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது. அங்கு வந்த நபர் ஒருவர், சுக்பீரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டார். எனினும் அருகே இருந்த அவரது ஆதரவாளர்கள் சுதாரித்துக் கொண்டு, அந்த நபரை தடுத்ததால், சுக்பீர் உயிர் தப்பினார்.
இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நரைன் சிங் என்பவரை காவலர்கள் கைது செய்தனர். அவர் மீது பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் கடத்தியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனிடையே துப்பாக்கிச் சூட்டை பெரிதுபடுத்தாமல், சுக்பீர் சிங் பாதல் பொற்கோயிலில் பாத்திரங்களை கழுவினார்.