இந்தியா
Calendar Artist: கடவுளைக் காட்டிய காலண்டர் ஆர்ட்டிஸ்ட்கள்… விருதுநகர் அடையாளத்தைப் பறித்த Digital Art…
Calendar Artist: கடவுளைக் காட்டிய காலண்டர் ஆர்ட்டிஸ்ட்கள்… விருதுநகர் அடையாளத்தைப் பறித்த Digital Art…
கடவுளைக் காட்டிய காலண்டர் ஆர்ட்டிஸ்ட்கள்… விருதுநகர் அடையாளத்தைப் பறித்த Digital Art…
இன்றைக்கு என்ன தேதி என கேட்டால் சற்றும் யோசிக்காமல் மொபைலை எடுத்து பதில் சொல்கிறோம். ஆனால் ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்படியில்லை, தேதி பார்ப்பது, கிழமை பார்ப்பது, நல்ல நேரம், பஞ்சாங்கம் பார்ப்பது என நல்லது கெட்டது அனைத்திலும் வாழ்வோடு ஒன்றிப்போன ஒன்றாக காலண்டர் இருந்து வந்தது.
அன்றைய தேதி கிழித்தால் தான் நாளே தொடங்கும் என்பதிலிருந்து தொடங்குகிறது காலண்டரின் முக்கியத்துவம். தேதி கிழித்தலோடு மட்டுமல்லாமல் முகப்பு படங்களும் காலண்டருக்கான முக்கியத்துவத்தை உறுதி செய்கின்றன. இப்போது தான் படங்களை டிஜிட்டல் பிரிண்டிங் செய்கிறோம். ஆனால் முன்பு ஓவியர்கள் தான் காலண்டர் படங்களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.
கருவறையில் மட்டுமே கண்ட கடவுளைக் கடைக்கோடி பாமரனுக்கும் அவனது குடிசைக்கும் கொண்டு போய் சேர்ந்த பெருமை காலண்டருக்கும், காலண்டர் ஓவியர்களுக்கும் தான் உண்டு. நாங்கள் வரைந்த தெய்வ ஓவியங்கள் தான் பலர் வீடுகளில் பூஜை அறைகளில் இருந்தது என்கிறார் காலண்டர் ஓவியர் சிவசுப்ரமணியன்.
தொடர்ந்து பேசிய அவர், “சிவன் இப்படி தான் இருப்பார், லட்சுமி இப்படி தான் இருப்பார் என ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வரையறை இருக்கும். அதை பின்பற்றித் தான் வரைவோம். சில சமயங்களில் ஒரு சிலர் உருவமில்லாத குலதெய்வம் பற்றியும் குறிப்புகள் தருவார்கள். அதை வைத்தே கற்பனையிலும் படத்தை வரைந்தும் தருவோம்.
தெய்வ படங்கள் தவிர இயற்கைக் காட்சிகள், நீருற்று, பறவைகள் என இதர காலண்டர் படங்களும் காலண்டர் ஓவியங்களில் அன்று புகழ் பெற்றிருந்த காலம் அது. காலண்டர்கள் சிவகாசியில் தயார் செய்யப்பட்டாலும் காலண்டர் ஓவியங்களுக்கு வித்திட்டவர் கோவில்பட்டியைச் சேர்ந்த கொண்டையா ராஜூ தான். அவர் சிவகாசி காலண்டர்கள் மற்றும் தீப்பெட்டி லேபிள்களுக்கு படம் வரைந்து கொடுத்து அதன் மூலம் சிவகாசி காலண்டர்களை உலகறியச் செய்தார். அதனைப் பின்பற்றிப் பல கலைஞர்கள் வரத்தொடங்கினர்” என்றார்.
கலர் ப்ரிண்ட் வருகைக்கு பின்னர் காலண்டர் ஓவியங்களுக்கான மதிப்பு குறைந்து வரும் நிலையில், அதற்கான ஓவியர்களும் குறைந்து வருகின்றனர். இது பற்றி பேசிய சிவசுப்பிரமணியன், “இதற்கான மதிப்பு குறைந்தாலும், இந்த ஓவியத்தில் உள்ள உயிரோட்டம் காரணமாகவே இன்னும் சிலர் எங்களை நாடி வருகின்றனர். அவர்களை நம்பியே இன்னும் காலண்டர் ஓவியம் வரைந்து வருகிறோன்” எனத் தெரிவித்தார்.
என்ன தான் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் டிஜிட்டல் முறையில் எந்த படத்தையும் எளிதாக அச்சிட்டுவிட முடியும் என்றாலும், ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல் தான் என்பதை ஒரு சிலர் உணர்ந்ததன் காரணமாகவே இன்றளவும் காலண்டர் ஓவியர்கள் தத்ரூபமான காலண்டருக்கு தங்கள் பங்காற்றி வருகின்றனர்.