இந்தியா
“விஜய் என்ன பேசுவாரா?” – அம்பேத்கர் புத்தக வெளியீடு விழா குறித்து திருமா பகிர்ந்த தகவல்!
“விஜய் என்ன பேசுவாரா?” – அம்பேத்கர் புத்தக வெளியீடு விழா குறித்து திருமா பகிர்ந்த தகவல்!
திருமாவளவன்
இன்று வெளியாக உள்ள அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவை புறக்கணித்தது குறித்தும், அதன் பின்னால் நடந்த நிகழ்வுகள் தொடர்பாகவும் விசிக தலைவர் திருமாவளவன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜயின் மாநாட்டு உரைக்கு முன்பே, புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்பதை அறிந்தும், அதில் தான் பங்கேற்க இசைவு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், விஜயின் மாநாட்டு உரைக்கு பின்னர், புத்தக வெளியீட்டு விழா மேடையில் அவர் என்ன பேசுவாரோ என்ற அச்சத்தை பதிப்பகத்தாரிடம் வெளிப்படுத்தியதாக திருமாவளவன் கூறியுள்ளார். அப்போது, புத்தக வெளியீட்டு விழா மேடையில், விஜய் துளியும் அரசியல் பேசமாட்டாரென விகடன் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக திருமாவளவன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், அதன்பிறகே, நாளேடு ஒன்று, திடீரென்று, “ஒரே மேடையில் விஜய்-திருமாவளவன்” என தலைப்புச் செய்தியாக வெளியிட்டு புத்தக விழாவை பூதாகரப்படுத்தி அரசியலாக்கியதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் நின்றபோதும் அந்த நாளேடு இப்படித்தான் தலைப்புச் செய்தி வெளியிட்டதா என்று காட்டமாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் முரண்களை எழுப்பி, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதே அதன் உள்நோக்கமாக இருக்கமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த நாளேட்டின் செய்தியைக் கண்டதும், விஜயை வைத்தே அந்நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று பதிப்பகத்தாரிடம் தான் தொடக்கத்திலேயே கூறியதாக திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வேளை, தான் அப்படி கூறாவிட்டாலும் கூட, விகடனால் இந்த முடிவைத் தான் எடுத்திருக்க இயலும் என்று விசிக தலைவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். விஜயை தவிர்த்திட முயற்சி செய்யுங்கள் என்று தான் கூறியிருந்தாலும், அதனை விகடன் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்பதுதான் இயல்பான உண்மை என்றும் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தன்னை விமர்சிப்பவர்கள், புத்தக வெளியீட்டு விழாவிற்கு இசைவளித்த திருமாவளனை விட்டு விட்டு, நிகழ்ச்சியை நடத்திட விகடன் முடிவெடுத்தது குறித்து எந்த கேள்வியையும் ஏன் எழுப்பவில்லை என அவர் வினவியுள்ளார்.
ஆதவ் அர்ஜூனா அழைத்தும் இந்நிகழ்வில் தான் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ள அவர், ஆதவ் அர்ஜூனா மீது தான் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே, திமுக தன்னை அச்சுறுத்தவில்லை என்பதற்கு சான்று என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், தன்னை ஒரு கருவியாகக் கொண்டு அரசியல் களத்தில் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் அதற்கு இடம் கொடுக்க இயலும் என்று கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், பொதுமக்கள் தம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வதே தற்போதைய முதன்மையான கடமை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இதுதொடர்பாக அளித்த பேட்டியில் “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருந்துகிறேன்” என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.