இந்தியா
2 சம்பவங்கள் என்னை பாதித்தது… அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன வரலாறு
2 சம்பவங்கள் என்னை பாதித்தது… அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன வரலாறு
சென்னையில் இன்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், மேனாள் நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து ‘எல்லோருக்கமான தலைவர் அம்பேத்கர்’ நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சத்துரு பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் அம்பேத்கர் சந்தித்த 2 சம்பவங்கள் என்னை பெரிம் பாதித்தது என்றார். அவர் பேசுகையில், “நூறு வருடத்திற்கு முன்பாக அமெரிக்காவின் நியூயார்க் சென்று புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து முனைவர் பட்டம் பெற்ற அசாத்திய மாணவர் ஒருவர் இருந்தார். அதுவும் அந்த மாணவரை சாதியை கூறி படிக்க மறுப்பு தெரிவித்து அவரின் சக சமூகமே தடுத்தது. அதனை தாண்டி அவர் பள்ளி சென்றால், சக மாணவர்களுடன் அமர முடியாமல், தண்ணீர் கூட பருக முடியாமல் என அத்தனை சக்திகளும் அவருக்கு எதிராக இருந்தது. ஆனால், அதனை எல்லாம் எதிர்த்து அவரின் வைராக்கியம் அவரை படிக்க வைத்தது. அந்த மாணவர் அண்ணல் அம்பேத்கர்.
வன்மத்தை மட்டுமே அவருக்கு காட்டிய இந்த சமூகத்திற்கு அவர் திருப்பி என்ன செய்தார் என்பதை பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைத்தது. பிறப்பால் அனைவரும் சமம் என்றும், சட்டத்திற்கு முன்பாக நாம் அனைவரும் சமம் எனும் நம் நாட்டின் அரசியல் சாசனத்தை வழங்கி நாட்டு மக்களுக்கு பெருமை தேடி தந்தவர்.
இன்று வெளியாகியுள்ள புத்தகத்தில் ‘விசாவிற்காக காத்திருக்கிறேன்’ எனும் அவரின் வாழ்க்கையை பற்றியது தான் மிகவும் என்னை சிந்திக்க வைத்தது. அதில் இரு சம்பவங்கள் என்னை பாதித்தது. ஒன்று அவரின் தந்தையை பார்க்க அவரும், அவரது சகோதரரும் செல்லும்போது ரயிலில் இருந்து இறங்கி மாட்டு வண்டிக்கு காத்திருக்கும் போது அழைத்து செல்ல அனைவரும் மறுக்கிறார்கள்.
Also Read :
“2026 தேர்தல் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்” – அம்பேத்கர் புத்தக விழாவில் ஆதவ் அர்ஜுனா
அதிக பணம் தருவதாக இவர்கள் சொல்வதை ஏற்று ஒரு வண்டிக்காரர் மட்டும் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அந்த வண்டிக்காரர் அந்த பசங்களை வண்டி ஓட்ட சொல்லிவிட்டு வண்டியோடே அவர் நடந்து செல்கிறார். காரணம் அவர்களுடன் சென்றால் தீட்டாகிவிடும். அந்த நாள் முழுக்க குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் எவ்வளவு கொடுமையானதாக இருந்தது என்பதை சொல்லியிருந்தார்.
இரண்டாவது முனைவர் பட்டமெல்லாம் பெற்று, வழக்கறிஞராக இந்தியாவுக்கு வருகிறார். பின் அரசு பொறுப்பில் இருக்கும் அம்பேத்கரை, மும்பையில் உள்ள ஒரு கிராமத்திற்கு அழைக்கின்றனர். அங்கு மக்கள் வண்டி வைத்து அவரை அழைத்து செல்ல முடிவு செய்கிறார்கள். ஆனால், வண்டிக்காரர் அவரை வைத்து வண்டியை ஓட்ட மறுக்கிறார். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் வாங்கிய அம்பேத்கரை விட வண்டி ஓட்டுபவர் தன்னை உயர்வாக நினைக்கிறார். அந்த சமூக கொடுமை தான் அவரை சமத்துவத்திற்கு போராட வைத்தது” என்று பேசினார்.