சினிமா
38 வயதில் எம்.டி., 42 வயதில் FRCP… யாருக்கும் தெரியாத சிவகார்த்திகேயன் அக்காவின் மறுபக்கம்!
38 வயதில் எம்.டி., 42 வயதில் FRCP… யாருக்கும் தெரியாத சிவகார்த்திகேயன் அக்காவின் மறுபக்கம்!
‘அமரன்’ பட வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கொடிநாட்டியவர். குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவரும்கூட. சிவகார்த்திகேயனுக்கு ஒரு அக்கா இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவரின் பெயர் கௌரி மனோகரி. பிரசன்னா என்பவரை திருமணம் செய்த இவருக்கு ராகவ், ஆதவ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
கௌரி மனோகரி அரசு மருத்துவர். இந்த நிலையில் நேற்று அவருக்கு பிறந்தநாள். அதனை முன்னிட்டு சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவில், கௌரி மனோகரி செய்த சாதனை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில் சிவகார்த்திகேயன், “என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனான அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். குழந்தை பெற்ற பிறகு எம்பிபிஎஸ் படித்தது முதல் 38 வயதில் தங்கப் பதக்கத்துடன் எம்.டி. பட்டம் பெற்றது வரை, இப்போது 42 வயதில் FRCPஐ அடைவது வரை, எல்லா தடைகளையும் தாண்டிவிட்டீர்கள். அப்பா நிச்சயம் உங்களை நினைத்து பெருமைப்படுவார். எப்போதும் அக்காவின் பக்கம் நிற்பதற்காக மிக்க நன்றி அத்தான்” என்று நெகிழ்ந்துள்ளார்.
FRCP என்பது ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸின் ஃபெலோ, இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்களுக்கான முதுகலை தகுதி மற்றும் மருத்துவ விருது. இது ஒரு மருத்துவரின் நிபுணத்துவம் மற்றும் மருத்துவத் தொழிலில் அவரின் பங்களிப்புக்காக அளிக்கப்படும் அங்கீகாரமாகும். இந்த அங்கீகாரத்தை பெற்றவர்கள், இங்கிலாந்தில் மருத்துவராக பணிபுரிய முடியும்.
அப்படியான அங்கீகாரத்தை தான் சிவகார்த்திகேயனின் அக்கா கௌரி மனோகரி பெற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாகவும், பிறந்தநாள் பரிசாகவும் சிவகார்த்திகேயன் தனது அக்காவுக்கு கார் ஒன்றை பரிசளித்தாராம்.
சிறு வயதில் இருந்தே நன்றாக படிக்கக்கூடியவராம் கௌரி மனோகரி. இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை.
இதனையடுத்து கடன் வாங்கி எம்பிபிஎஸ் சேர்த்துவிட வீட்டில் தயாராக இருந்தபோதும் அதனை மறுத்த கௌரி மனோகரி, “மெரிட்டில் மெடிக்கல் சீட் வாங்குவேன்” என்று கூறி அதற்கு தயாராகியுள்ளார். சொன்னது போலவே, அடுத்த வருடமே மெரிட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரவும் செய்துள்ளார்.
அதுவும் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு இதனை செய்துள்ளார். பின்னர், 38 வயதில் எம்.டி. படிப்பை தங்கப் பதக்கத்துடன் முடித்த கௌரி மனோகரி தற்போது 42 வயதில் இங்கிலாந்துக்கு செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.