இந்தியா
Devendra Fadnavis | சொன்னதை போல ‘மீண்டு(ம்) வந்த கடல்..’ – யார் இந்த தேவேந்திர பட்நாவிஸ்?
Devendra Fadnavis | சொன்னதை போல ‘மீண்டு(ம்) வந்த கடல்..’ – யார் இந்த தேவேந்திர பட்நாவிஸ்?
“தண்ணீர் உள்வாங்குவதால் கரையில் வீடு கட்டாதீர்கள்.. நான் கடல். மீண்டும் வருவேன்..” என உத்தவ் தாக்கரே கூட்டணியிலிருந்து பிரிந்த போது, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முழங்கியவர்தான் தேவேந்திர பட்னாவிஸ். அந்த சபதத்தை இன்று நிறைவேற்றியுள்ளார்.
“Deva Bhau” என மகாராஷ்டிராவில் எல்லாராலும் அன்பாக அழைக்கப்பட்டவர்தான் தேவேந்திர பட்னாவிஸ். 1970 ஆம் ஆண்டு பிறந்த பட்னாவிஸ், கல்லூரி காலத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இணைந்து பணியாற்றினார்.
21 வயதிலேயே நாக்பூர் மாநகராட்சி உறுப்பினரான பட்னாவிஸ், 27 வயதில் அதே மாநகராட்சியின் மேயர் ஆனார். 2013 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா பாஜக தலைவராக தேர்வான அவர், அடுத்த ஆண்டே தனது 44 வயதில் மகாராஷ்டிராவின் முதலமைச்சரானார். மகாராஷ்டிராவில், சரத் பவாருக்குப் பின் மிகக்குறைந்த வயதில் முதலமைச்சரானவர் என்ற பெருமையையும் பெற்றார் பட்னாவிஸ்.
5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சிச் செய்த பட்னாவிஸுக்கு, கூட்டணி கட்சியான சிவசேனா மூலம் நெருக்கடி வந்தது. 2019-ல் பாஜக-சிவசேனா கூட்டணி அதிக இடங்களை பிடித்தாலும், ஆட்சி அமைக்க உத்தவ் தாக்கரே ஆதரவு தரவில்லை. அஜித் பவாருடன் சேர்ந்து 5 நாட்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்த பட்னாவிஸ், பதவியை ராஜினாமா செய்தார்.
எனினும் சில நாட்களிலேயே சிவசேனா கட்சி உடைய, ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து மீண்டும் ஆட்சியை அமைத்தார். பாஜக அதிக இடங்களை வைத்திருந்தபோதும், ஷிண்டேவுக்காக முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தார்.
இந்த நிலையில்தான் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரே அணி சிறப்பாக செயல்பட்ட நிலையில், பாஜக எம்.பி.க்களின் எண்ணிக்கை 23 லிருந்து 9 ஆக சரிந்தது.
“நான் அபிமன்யூ. சக்கரவியூகத்தை எப்படி முறியடிப்பது என்பது எனக்கு தெரியும்” என அவர் கூறியதைப்போலவே, பட்னாவிஸ் கதை முடிந்தது என பலரும் விமர்சித்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் பீனிக்ஸ் பறவையாக மீண்டார். மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக மட்டும் 132 இடங்களை கைப்பற்றி சாதனைப் படைத்தது.
உத்தவ் தாக்கரே, சரத் பவார் என அரசியல் ஜாம்பாவான்களை எல்லாம் வீழ்த்தி மீண்டும் அரியணையை எட்டிப்பிடித்துள்ளார் பட்னாவிஸ்.