இந்தியா
Villupuram Flood: “நாலு நாள் ஆச்சு – தண்ணி இன்னும் வடியல” – விஷப் பூச்சிகளால் அச்சத்தில் மக்கள்…
Villupuram Flood: “நாலு நாள் ஆச்சு – தண்ணி இன்னும் வடியல” – விஷப் பூச்சிகளால் அச்சத்தில் மக்கள்…
வடியாத மழை நீரால் அவதிப்படும் பொதுமக்கள் – தொற்று நோய் ஏற்படும் அபாயம்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி ஃபெஞ்சல் புயல் பாதிப்பையொட்டி, கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஏரிகளில் நிரம்பிய நீரும், தென்பெண்ணை ஆற்றில் நிரம்பிய தண்ணீரையும் திறந்து விட்டதால் விழுப்புரம் நகர குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீர் 4 நாட்களைக் கடந்தும் பல பகுதிகளில் வடியாததால் குளமாக சூழ்ந்துள்ளதால், தண்ணீரை கடந்து செல்ல வழியின்றி குடியிருப்பு மக்கள் தவிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் கோலியனூர் ஒன்றியம், சாலை அகரம் ஊராட்சியில் உள்ள தேவநாதசுவாமி நகர் விரிவாக்கம், கிருஷ்ணா நகர், நகராட்சிக்கு உட்பட்ட ஆசிரியர் நகர், பொன் அண்ணாமலை நகர், சுதாகர் நகர், ஸ்ரீராம் நகர் பகுதிகளில் தண்ணீர் வடியாததால் மக்கள் வெளியேற வழியின்றி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் தொல்லையில் சிக்கி சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் நிவாரணப் பொருட்கள் எதுவும் வரவில்லை எனவும் பால் பாக்கெட் மட்டும்தான் வந்தது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த சில வருடங்களாக மழை பெய்தால் இதே நிலைதான் நீடித்து வருகிறது. இந்த முறையாவது தமிழக அரசாங்கம் எங்கள் நலன் கருதி தண்ணீர் தேங்காமல் இதனை சரி செய்ய வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள நீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.