இந்தியா
என்னம்மா நீங்க இப்படிப் பண்றீங்களேம்மா.. இளம் பெண்ணால் திருப்பதியில் சர்ச்சை!
என்னம்மா நீங்க இப்படிப் பண்றீங்களேம்மா.. இளம் பெண்ணால் திருப்பதியில் சர்ச்சை!
திருப்பதியில் இளம் பெண் ஒருவர் ‘புஷ்பா-2’ பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட ரீல்ஸ் காட்சிகள் பக்தர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இளம்பெண்ணின் ரீல்ஸ் மோகம் சர்ச்சையில் முடிந்துள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம் நாட்டை உலுக்கியெடுத்த நிலையில், திரை உலகைச் சேர்ந்தவர்களையும் ஒரு ஆட்டம் காட்டி விட்டுத் தான் அடங்கியது. இதனால் கோயில் விவகாரத்தில் அரசியல் பிரமுகர்கள் முதல், திரைப் பிரபலங்கள் வரை அனைவரும் எச்சரிக்கையுடன் பேசி வரும் நிலையில், இந்த விவகாரத்தை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாத இளம் பெண் ஒருவர் எதார்த்தமாக வெளியிட்ட ரீல்ஸ் மீண்டும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனை சாவடி வழியாக காரில் வந்த இளம் பெண் ஒருவர், சோதனைச் சாவடி அருகே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி திடீரென குத்தாட்டம் போட ஆரம்பித்தார். அதுவும் லேட்டஸ்டாக வெளியாகி வசூலில் கலக்கி வரும் ‘புஷ்பா-2’ படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு அவர் போட்ட ஆட்டத்தை ரீல்ஸாக பதிவு செய்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வேகமாக பரவ சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி விட்டது. இதனைக் கண்ட திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்கள் இளம் பெண்ணிற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்க ஆரம்பித்தனர்.
இது குறித்து சில பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினர். நடனமாடிய இளம் பெண் யார் என அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கும் புகார்கள் பறந்துள்ளன. மேலும் அந்த இளம் பெண்ணை தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
பக்தர்களின் கடும் எதிர்ப்பை கண்டு பயந்து போன அந்த பெண், தான் அறியாமல் செய்து விட்டதாகக் கூறி வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இளம் பெண்ணின் ரீல்ஸ் மோகம் சர்ச்சையான சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.