இலங்கை

சுவிஸ்சர்லாந்தின் இராஜாங்கத் துணைச்செயலாளர் – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு!

Published

on

சுவிஸ்சர்லாந்தின் இராஜாங்கத் துணைச்செயலாளர் – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு!

சுவிஸ்சர்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான பெடரல் திணைக்களத்தின் சமாதானம், மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின் ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

 அவர், முதலில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தினைச் சந்தித்து உரையாடியுள்ளார். இதன்போது, உள்நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஆரோக்கியமான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Advertisement

 இதனைத்தொடர்ந்து கொழும்பில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

 இதன்போது அரசாங்கம், சமாதானத்தினைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கத்தை உருவாக்குதல், மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளகப் பொறிமுறைகளை முன்னெடுப்பதற்கு சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அவ்விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதன் அவசியம் பற்றி சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளனர்.

 அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏற்கனவே புதிய அரசியலமைப்புக்காக தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் இருந்து அடுத்தகட்டமாக முன்னெடுப்பதாக அறிவித்துள்ளபோதும் ஆட்சிப் பொறுப்பேற்கப்பட்டுள்ளதன் பின்னர் அரசாங்கத்தின் பிரதான கட்சியின் வெளிப்பாடு மாகாண சபை முறைமை நீக்குதல் உள்ளிட்ட வகையில் அமைந்திருக்கின்றது. 

Advertisement

ஆகவே முரண்பாடான கருத்துக்களை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் அவசியம் என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் வினைத்திறனாகச் செயற்படுவதற்கு சுவிஸ்சர்லாந்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 இதனையடுத்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சையும் சந்தித்து இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின் கலந்துரையாடியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் அவர் இன்றையதினம் வடக்குக்கு செல்லவுள்ளதோடு, இரண்டு நாட்கள் தங்கியிருப்பதோடு அரசியல் மற்றும் சிவில் தரப்பினரைச் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version