இந்தியா
போராட சென்ற விவசாயிகள்.. கண்ணீர் புகை குண்டு வீசிய போலீஸ்
போராட சென்ற விவசாயிகள்.. கண்ணீர் புகை குண்டு வீசிய போலீஸ்
விவசாய கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம், மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது, போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கேரி வன்முறையில் குற்றவாளிகளுக்கு தண்டனை, 2023 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் மறுசீரமைப்பு, 2020-2021 விவசாயிகள் போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு. முந்தைய நில கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடாக 10% மனைகள் ஒதுக்க வேண்டும்.
இழப்பீடு தொகையை 64.7% அதிகரிக்க வேண்டும். ஜனவரி 1, 2024க்குப் பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 20% மனைகள் வழங்க வேண்டும். நிலமற்ற விவசாயிகளின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் ‘டெல்லி நோக்கி’ (டெல்லி செல்லோ) பேரணியை துவங்கியுள்ளனர்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதியில் இருந்து பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷம்பு மற்றும் கானௌரி பகுதியில் முகாமிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர். மறுபுறம், பாரதிய கிஷான் பரிஷத் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டிசம்பர் 2ம் தேதி பகல் 12 மணிக்கு டெல்லி நோக்கி தங்களின் பேரணியை துவங்கினர். இவர்களுடன் பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷம்பு மற்றும் கானௌரி பகுதியில் முகாமிட்டிருந்த விவசாயிகள் இன்று (டிச. 6ம் தேதி) இணைந்துள்ளனர்.
அதன்படி இன்று விவசாய சங்கங்கள் ஒன்றுகூடி டெல்லியை நோக்கி தங்களின் பேரணியை துவங்கினர். இவர்களை எல்லையில் தடுத்து நிறுத்த போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். இவர்கள் வரும் பாதையில் முள்வேலி அமைத்தும், சாலைகளில் காங்கிரீட் தடுப்புகளும் அமைத்திருக்கின்றனர்.
பேரணியைத் துவங்கி விவசாயிகள், வழியில் இருந்த முள்வேலிகளை அகற்றிவிட்டு, தொடர்ந்து தங்களின் பேரணியைத் துவங்கினர். பிறகு அவர்கள் காங்கிரீட் தடுப்பு அருகே வந்தபோது, அங்கு தயாராக இருந்த போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை விவசாயிகளை நோக்கி வீசினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் கண்ணீர் புகை குண்டில் இருந்து தப்பித்து சிதறி ஓடினர். இதில், ஆறு விவசாயிகள் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஷம்பு எல்லையில், செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தர், “நாங்கள் டெல்லி நோக்கி செல்ல முடியாதவாறு போலீஸார் தடுக்கின்றனர். போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் விவசாய சங்கத் தலைவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர். எனவே நாங்கள் எங்கள் பேரணியை நிறுத்தி வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.