இந்தியா
யார் மனசுல யாரு?… விஜய் vs திருமாவளவன்… அரசியல் களத்தில் பேசுபொருளாக அமைந்த ‘மனசு’!
யார் மனசுல யாரு?… விஜய் vs திருமாவளவன்… அரசியல் களத்தில் பேசுபொருளாக அமைந்த ‘மனசு’!
சென்னையில் நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், மேனாள் நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இதற்கிடையே, புத்தக வெளியீட்டு விழா மூலமாக “மனசு” என்கிற வார்த்தை பேசுபொருளாக அமைத்தது.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் “விசிக தலைவர் தொல். திருமாவளவனால் இன்று வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்குக் கூட அவரால் கலந்துகொள்ள முடியாத அளவிற்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன். அவரோட மனசு முழுக்க இன்று நம்மோடுதான் இருக்கும்” என்று பேசினார்.
இதற்கு பதில் கொடுக்கும் விதமாக பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “விஜயின் மனசு மேடையில் இல்லாமல், என்னை நோக்கியே இருந்திருக்கிறது என்று மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் அங்கே இருந்தாலும், நான் எங்கே இருக்கிறேன் என விஜய் எண்ணிக்கொண்டே இருந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவில்லை என்பது அவருக்கு வருத்தம், ஆதங்கம். அதனால் அவர் அவ்வாறு அப்படி சொல்லியிருக்கிறார். மற்றபடி எனக்கு எந்த நெருடலும் இல்லை.” என்று திருமாவளவன் கூறினார்.
முன்னதாக, புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “கால சூழ்நிலையால் திருமா மேடையில் இல்லை. ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கும்.” என்று பேசினார்.
இதற்கிடையே, விஜய்யின் மனசு பேச்சை குறிப்பிடும் விதமாக திருப்போரூர் விசிக எம்எல்ஏ பாலாஜி, தனது எக்ஸ் பக்கத்தில், “யார் யாரு மனசுல என்னென்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சா தான் எந்த பிரச்சினையும் இல்லையே. அது தெரியாம தான் எல்லாமே பிரச்சினையாக இருக்கு” என்று விஜய் குரலில் பேசியதை பதிவாக வெளியிட்டுள்ளார்.
இப்படி, புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய “மனசு” தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக அமைந்திருக்கிறது.