இலங்கை

அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினாலேயே அரிசி தட்டுப்பாடு – அஜித் பி. பெரேரா!

Published

on

அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினாலேயே அரிசி தட்டுப்பாடு – அஜித் பி. பெரேரா!

அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் திட்டமிட்டு நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அரிசி இறக்குமதி விவகாரத்திலும் பாரிய மோசடிக்கான திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.

தேவைக்கு அதிகமான அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் அடுத்த அறுவடையின்போது விவசாயிகளுக்கு நியாயமான விலையில் நெல்லை விற்பனை செய்ய முடியாத அபாயம் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

Advertisement

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் தொடர்ந்து குறிப்பிட்டதாவது;
காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவே தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், அரிசி தட்டுப்பாடு, அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் ஏற்படுத்தப்பட்டவை ஆகும். 

இவர்கள் நெல் மற்றும் அரிசி என்பவற்றை மறைத்து வைத்திருக்கின்றனர். இவர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் அரிசியின் அளவை அரசாங்கத்தால் இலகுவாக கண்டுபிடிக்க முடியும்.

சில அதிகாரிகள் இந்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அடிபணிந்துள்ளதால் அல்லது அவர்களால் அரசாங்கத்துக்கு தவறான தகவல் வழங்கப்படுவதன் காரணமாகவே அதனை அரசாங்கத்தால் கணிப்பிட முடியாதுள்ளது. அரிசி தட்டுப்பாட்டை அரசாங்கத்தால் முகாமைத்துவம் செய்ய முடியும். அதற்கான தீர்வும் காணப்படுகிறது.

Advertisement

அதேபோன்று வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறப்படுவது சந்தேகத்துக்கிடமானதாக காணப்படுவதோடு ஊழல் மிக்கதாகவும் உள்ளது. 

அரிசியை இறக்குமதி செய்வதற்கான பணம் இந்த பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களாலேயே வழங்கப்படவுள்ளது. அரிசியைப் பதுக்கி தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ள அவர்களாலேயே அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

இதன் பின்புலத்தில் பாரதூரமான பின்விளைவு ஏற்படும். அடுத்த அறுவடையின்போது நாட்டினுள் தேவைக்கதிகமான அரிசி காணப்பட்டால், விவசாயிகளுக்கு நெல்லுக்கான நியாயமான விலை கிடைக்காது. விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். 

Advertisement

எனவே, நாட்டுக்கு தேவையான அரிசியின் அளவு எவ்வளவு? அதனை விநியோகிப்பதற்கான வழிமுறை என்ன? எந்த வகை அரிசி தேவையாக உள்ளது? உண்மையில் அரிசி பதுக்கப்பட்டுள்ளதா? பதுக்கப்படாவிட்டால் அரிசிக்கு என்ன ஆயிற்று? என்பன குறித்து தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அதனை விடுத்து அரசாங்கம் எதிர்க்கட்சியைப் போன்று செயற்படக்கூடாது. மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் உடனடியாக குறைக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் கோஷமாக இருந்தது. உடனடியாக என்ற அந்த சொல்லை தற்போது ‘இரண்டரை அல்லது மூன்று ஆண்டுகள் என்று அர்த்தப்படுத்தியுள்ளனர். அரசாங்கம் மக்களை எந்தளவுக்கு ஏமாற்றியிருக்கிறது என்பது இதிலிருந்தே தெளிவாகிறது- என்றார். (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version