இந்தியா
திருவள்ளுவர் சிலையால் அடையாளம் மாறிய திருவணை பாறை… குமரியின் ஐகான் ஸ்பாட்டின் வரலாறு…
திருவள்ளுவர் சிலையால் அடையாளம் மாறிய திருவணை பாறை… குமரியின் ஐகான் ஸ்பாட்டின் வரலாறு…
திருவள்ளுவர் சிலையால் அடையாளம் மாறிய திருவணை பாறை… குமரியின் ஐகான் ஸ்பாட்டின் வரலாறு…
இந்தியாவின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி பல்வேறு சுற்றுலா தளங்களை உள்ளடக்கியது. வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் என மூன்று கடல்களும் சங்கமிக்கும் குமரி கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சங்கமிப்பது வழக்கம்.
குமரிக் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் ஒன்றின் மீது சுவாமி விவேகானந்தர் தவம் இருந்த காரணத்தினால் அது விவேகானந்தர் பாறை என அழைக்கப்படுகிறது. 1980ஆம் ஆண்டு விவேகானந்தர் பாறை மீது விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது.
அதன் அருகே அமைந்திருக்கும் ஒரு பாறையில் தமிழ்நாடு அரசு சார்பில் உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரது புகழை அடுத்த தலைமுறைகளுக்கும் கொடு சேர்க்கும் விதமாக 133 அடி உயரத்தில் பிரம்மாண்டத் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த திருவள்ளுவர் சிலை தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதனை முன்னிட்டு திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவினைத் தமிழக அரசு சார்பில் பிரம்மாண்டமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு முன்பு கடல் நடுவே இருந்த அந்த பாறை எப்படி இருந்தது என்பது குறித்து உள்ளூர் மீனவர் கஷ்மீர் கூறுகையில், “நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது சிறிய பலகை, கட்டுமரம் கட்டை துண்டுகள் போன்றவற்றில் ஏறி சின்ன திருவணை என்று அழைக்கப்படும் திருவள்ளுவர் சிலை பாறையிலும், பெரிய திருவணை என அழைக்கப்படும் விவேகானந்தர் பாறைக்கும் நீந்திச் செல்வது வழக்கம். திருவணை என்பது திரு அணை என்பது காலப்போக்கில் மருவி திருவணை என அழைக்கப்படுகிறது.
சின்ன திருவணை என்று அழைக்கப்படும் திருவள்ளுவர் பாறையில் நாங்கள் சிறுவயதில் மீன் பிடிக்க, நண்டு பிடிக்க மற்றும் சங்கு எடுக்கப் போன்றவற்றிற்காகச் செல்வது வழக்கம். பல ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வான் உயரத் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டது.
இந்த திருவள்ளுவர் சிலை கட்டுவதற்குக் கிட்டத்தட்ட 9 முதல் 10 ஆண்டுகள் காலம் எடுத்துக் கொண்டது. தற்போது அது சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. முன்பு போல நாங்கள் தற்பொழுது அவ்வளவு எளிதாக திருவள்ளூர் சிலை பாறை அருகே செல்ல முடியாது.
தற்போது இந்த திருவள்ளுவர் சிலை வந்த பிறகு அது எங்கள் ஊரின் ஒரு முக்கிய அடையாளமாகவே மாறிவிட்டது. பேருந்துகள், ரயில்களில் திருவள்ளுவர் படம் என வைக்கப்படும்போது அது கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை போன்ற வைக்கப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.