இலங்கை
லொஹான் ரத்வத்தவுக்கு டிசம்பர் 09 வரை விளக்கமறியல் விதிப்பு!
லொஹான் ரத்வத்தவுக்கு டிசம்பர் 09 வரை விளக்கமறியல் விதிப்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
அவரை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று (07) ஆஜர்படுத்தியபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்துக்கு காரணமாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கடந்த வெள்ளிக்கிழமை (06) கைது செய்யப்பட்டிருந்தார்.
பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா குணவர்தன ஆகியோர் கடந்த வியாழக்கிழமை (05) பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் ரூ. 25,000 ரொக்கம், ஒரு மில்லியன் ரூபா கொண்ட 2 சரீரப் பிணைகளில் நுகேகோடை நீதவான் திருமதி ருவினி ஜயவர்தன உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.