இந்தியா
“விசிக தலைவர் யார்? திருமா கை கட்டப்பட்டுள்ளது” – அண்ணாமலை
“விசிக தலைவர் யார்? திருமா கை கட்டப்பட்டுள்ளது” – அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், விசிகவில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் பேசியதாவது; “புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருவோம் என்று சொல்லிவிட்டு பிறகு வரவில்லை. அந்த புத்தக வெளியீட்டு விழாவில் அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சென்று பேசுகிறார்.
திருமாவளவன் மிகவும் சாமர்த்தியமான தலைவர். தமிழக அரசியலில் தனிப்பெரும் ஆளுமையாக அவர் வந்தது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் இன்று நடந்திருப்பது திருமாவளவனுக்கு பெருமை இல்லை. கூட்டணியில் இருந்துகொண்டே தர்மசங்கடம். நடவடிக்கை எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்டுள்ளது. திருமாவளவனுக்கு இது நடந்திருக்கக் கூடாது. கையாண்ட விதம் சரி இல்லை என்பது எங்களின் கருத்து.
திருமாவளவன், நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்போது தலைவர் அவரா அல்லது அந்த தம்பியா (ஆதவ் அர்ஜுனா) எனும் சந்தேகம் வருகிறது. முதலமைச்சரை விமர்சித்தபிறகு எப்படி கூட்டணியில் தொடரமுடியும். அதுமட்டுமல்லாமல், நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகிறோம் என்றால் சந்தேகம் வருகிறது. திருமாவளவன் தான், ஆதவ் அர்ஜுனாவை அனுப்பினேன் என்று சொன்னால், அவர் பேசிய கருத்து யாருடையது” என்று தெரிவித்தார்.