இந்தியா

4 திருமணங்கள் செய்த கல்யாண ராமன்… உண்மை முகம் தெரியவந்ததால் புதுமணப்பெண் அதிர்ச்சி

Published

on

4 திருமணங்கள் செய்த கல்யாண ராமன்… உண்மை முகம் தெரியவந்ததால் புதுமணப்பெண் அதிர்ச்சி

சென்னையில் காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை கரம் பிடிக்க காதலன் தயாரானதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண் கல்யாணத்தை நிறுத்த முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அபலை பெண்ணின் குரலுக்கு யாரும் செவி சாய்க்காததால், அந்த இளைஞர் 4 பெண்களை காதலித்து ஏமாற்றி கல்யாணராமனாக உலாவியது அம்பலமாகியுள்ளது.

Advertisement

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதை தவறாகப் புரிந்துகொண்ட கோக்குமாக்கு இளைஞர் ஒருவர், அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, பொய் மூட்டைகளை மட்டுமே அவிழ்த்துவிட்டு, பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளார். சினிமா கதாபாத்திரங்களை விஞ்சும் அளவிற்கு பிரதான தொழிலே கல்யாணம் செய்வதுதான் என்றிருந்த இளைஞரின் கபட நாடகம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கத்திக் கூப்பாடு போட்டும் இந்த உலகம் நம்பவில்லை.. விளைவு.. தற்போது 4-வதாக ஒரு பெண் தனது வாழ்க்கையை இழந்து பரிதவித்துள்ளார்..

நாகர்கோவிலைச் சேர்ந்த 27 வயதான லிஜீன் என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் போன் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அதே கம்பெனியில் கடலூர் மாவட்டம் வள்ளி மதுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பிரியதர்ஷினி என்பவரும் பணியாற்றியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியுள்ளது.

இதனை அடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் பாரிமுனையில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் நண்பர்கள் முன்னிலையில் இருவரும், மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இருமுறை பிரியதர்ஷினி கர்ப்பம் அடைந்த போது, அவருக்கு மாத்திரை வாங்கிக் கொடுத்து வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய லிஜீன் காரணமாக இருந்துள்ளார்.

Advertisement

மேலும், திருமணத்திற்கு தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருவதாகக் கூறிச் சென்றவர். திரும்பி வரவே இல்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், தண்டையார் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், பெற்றோர் சம்மதத்துடன் லிஜீனுக்கு, நான்சி பிரியங்கா என்ற வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது, அங்கு சென்ற பிரியதர்ஷினி, தனக்கு நியாயம் கேட்டுப் போராடினார்.

Advertisement

ஆனால், போலீசார் அவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது, உருண்டு புரண்டு அழுது புலம்பிய பெண்ணை, வாயில்லாத ஜீவனை கசாப்பு கடைக்குத் தூக்கிச் செல்வது போன்று, அவரை போலீசார் தூக்கிப் போட்டுச் சென்றனர்.

திருமணமான மூன்று நாட்களிலேயே, புதுப்பெண் நான்சி பிரியங்காவுக்கு தனது கணவர் லிஜீன் குறித்த உண்மை தெரியவந்துள்ளது. கல்யாணத்தின் போது நியாயம் கேட்டுப் போராடிய பிரியதர்ஷினி, தன்னை ஒருதலையாகக் காதலித்ததாக லிஜீன் அளந்துவிட்டுள்ளார். அத்துடன், தன்னை ஒரு மிஸ்டர் கிளீன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து பெண் வீட்டாரை நம்ப வைத்துள்ளார்.

இந்த நிலையில், தங்களது கல்யாணத்தின் போது பிரியதர்ஷினி போராடியது தொடர்பான செய்தியைப் பார்த்த புதுப்பெண் நான்சி பிரியங்காவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, தனது கணவனின் செல்போனை எடுத்து அவர் சோதனை செய்துள்ளார். அப்போது, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் பல பெண்களுடன், லிஜீன் தொடர்பில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

Advertisement

மேலும், பிரியதர்ஷினிக்கு முன்பே இரு பெண்களை லிஜீன் ஏமாற்றியதை அறிந்து, பெண் வீட்டார் அனைவரும் பேரதிர்ச்சியடைந்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு காரைக்காலைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து, கர்ப்பமாக்கி ஏமாற்றியது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், அவருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் 2022 ஆம் ஆண்டு தென்காசியைச் சேர்ந்த பெண் ஒருவரையும் ஏமாற்றியது தெரியவந்தது. கடைசியாக பிரியதர்ஷினியை ஏமாற்றிவிட்டு, தன்னையும் திருமணம் செய்ததை அறிந்து புதுப்பெண் நான்சி பிரியங்கா, கடும் கோபம் அடைந்துள்ளார். இதுகுறித்து லிஜீனிடம் கேட்க முயற்சித்த போது, அவர் வீட்டை விட்டு வெளியேறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார்.

Advertisement

இதனால், பொங்கியெழுந்த புதுப்பெண் கணவர் லிஜீன் மற்றும் அவரது தந்தை லிசான் கிறிஸ்டோபர், தாய் விமலா ராணி ஆகியோர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய, அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த லிஜீனைக் கைது செய்தனர்.

அவர் மீது, ஏமாற்றுதல், வரதட்சணை கொடுமை உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். ஏற்கனவே தன்னைத் திருமணம் செய்து லிஜீன் ஏமாற்றியதாக பிரியதர்ஷி புகார் அளித்துள்ளார். அப்போது, புகாரின் பேரில் தண்டையார் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீபா அலட்சியம் காட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லிஜீன் – நான்சி திருமணத்தை பிரியதர்ஷினி தடுக்க வந்த போதாவது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், 4-வது பெண்ணின் வாழ்க்கையாவது காப்பாற்றப்பட்டிருக்கும் என்று உறவினர்கள் புலம்புகின்றனர். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது போன்று, 4-வது பெண்ணின் வாழ்க்கையிலும் விளையாடி பின், கல்யாண ராமனாக உலாவிய லிஜீனை போலீசார் கைது செய்துள்ளதாகக் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

Advertisement

இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்த போலீசார் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version