இந்தியா
8வது சம்பள கமிஷன் மற்றொரு ஊதிய திருத்த முறையுடன் மாற்றப்படுமா? தொழிற்சங்கங்கள் கூறுவதென்ன!
8வது சம்பள கமிஷன் மற்றொரு ஊதிய திருத்த முறையுடன் மாற்றப்படுமா? தொழிற்சங்கங்கள் கூறுவதென்ன!
8வது ஊதியக் குழு அமைப்பது தற்போது பரிசீலனையில் இல்லை என்று நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்தியது. இந்நிலையில், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைத் திருத்துவதற்கான மற்றொரு வழிமுறையை அரசாங்கம் கொண்டு வரலாம் என்று ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசாங்கம் ஒரு புதிய முறையைக் கொண்டு வருவதற்கான சாத்தியம் உள்ளதாக ஊழியர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஊதியங்களை திருத்துவதற்கு 8வது ஊதியக் குழுவே சிறந்த வழி என்று தற்போது வரை நம்புவதாகவும், ஆனால், அரசாங்கம் மற்றொரு வழிமுறையை கொண்டு வர வாய்ப்புள்ளது என்றும் தேசிய ஊழியர் தரப்பு செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறியுள்ளார். NC-JCM, அதிகாரத்துவம் மற்றும் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கியது.
இது மத்திய அமைச்சரவை செயலாளரின் தலைமையில் உள்ளது. அரசாங்கத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையிலான அனைத்து முரண்பாடுகளையும் தீர்க்க இது ஒரு அதிகாரப்பூர்வ தளமாக செயல்படுகிறது. இதற்கிடையே, சம்பளத் திருத்தம் குறித்து அரசிடம் வேறு ஏதேனும் திட்டம் இருந்தால், அவர்கள் எங்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றும், அதற்காக என்சி-ஜேசிஎம் கூட்டம் நடத்தப்பட்டு, விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மிஸ்ரா கூறினார்.
இந்நிலையில், 8வது ஊதியக் குழுவுக்குப் பதிலாக, மற்றொரு சம்பளத் திருத்த வழிமுறையை அரசாங்கம் கொண்டு வருவதற்கான வாய்ப்பையும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு நிராகரிக்கவில்லை.
பட்ஜெட்டில் சம்பள கமிஷன் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை என்றால், இது சாத்தியமாக இருக்கலாம் என்றும், வரவிருக்கும் NC-JCM கூட்டத்தில் விஷயங்கள் பெரும்பாலும் தெளிவாகிவிடும் என்று நாங்கள் நம்புவதாகவும் கூட்டமைப்பின் தலைவர் ரூபாக் சர்க்கார் கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 8வது ஊதியக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அத்தகைய முன்மொழிவு எதையும் தற்போது பரிசீலிக்கவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட 8வது ஊதியக் குழு மீதான புதிய கேள்விகளுக்கு பதிலளித்த நிதி அமைச்சகம், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது.