இந்தியா
அஜித் பவாரின் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துகள் விடுவிப்பு – வருமானவரித்துறை நடவடிக்கை
அஜித் பவாரின் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துகள் விடுவிப்பு – வருமானவரித்துறை நடவடிக்கை
பினாமி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமானவரித்துறை விடுவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 2021 ஆம் ஆண்டு சிவசேனா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி வகித்தபோது, அவருடைய அலுவலகங்களில் வருமான துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பினாமி பெயரில் அவர் சொத்துகள் வாங்கி குவித்து இருப்பதாகக் கூறி சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்தார். மேலும் தனது சொத்துகள் முடக்கத்தை எதிர்த்து பினாமி சொத்து பரிவர்த்தனை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த தீர்ப்பாயம், அஜித் பவார் குடும்பத்தினர் பினாமி பெயரில் சொத்து வாங்கியதை வருமானவரித்துறை நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.
அதனடிப்படையில் பினாமி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட அஜித் பவாரின் சொத்துகளை வருமானவரித்துறை விடுவித்துள்ளது. அஜித் பவார் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அடுத்த நாளே பறிமுதல் செய்யப்பட்ட அவரது சொத்துகள் வருமான வரித்துறையால் விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.