இந்தியா
ஜங்புரா தொகுதிக்கு மாற்றப்படும் மணீஷ் சிசோடியா: டெல்லியில் ஆம் ஆத்மி வகுக்கும் தேர்தல் வியூகம்
ஜங்புரா தொகுதிக்கு மாற்றப்படும் மணீஷ் சிசோடியா: டெல்லியில் ஆம் ஆத்மி வகுக்கும் தேர்தல் வியூகம்
பதவிக்கு எதிரான அச்சுறுத்தல், மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் ஏற்படும் இடையூறு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றுக்கு இடையே டெல்லி சட்டமன்ற தேர்தலை ஆம் ஆத்மி கட்சி எதிர்கொள்கிறது. இதில் பலர் நிராகரிக்கப்படலாம் என்றும், பலருக்கு வெவ்வேறு தொகுதிகள் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்தில் படிக்கவும்: As Manish Sisodia is shifted to Jangpura, how AAP is planning to beat anti-incumbency in Delhi அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், முன்னாள் துணை முதலமைச்சரும், பட்பர்கஞ்ச் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மணீஷ் சிசோடியாவுக்கு, வேறு தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், சிசோடியா தற்போது வரை பதிலளிக்கவில்லை என கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார். மாற்றங்கள் பரிசீலனையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், பெரிய பிரச்சனைகள் உள்ள மற்ற தொகுதிகள் மற்றும் தலைவர்கள் குறித்து முதலில் ஆலோசிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி, ஜங்புரா தொகுதியில் சிசோடியா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் “சமீபத்தில் இணைந்த ஒரு பிரபலத்திற்கு” பட்பர்கஞ்ச் தொகுதி ஒதுக்கப்படலாம் எனவும் கருதப்படுகிறது. சமீபத்தில் கட்சியில் இணைந்தவர்களில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுரேந்திர பால் சிங், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ஜிதேந்தர் சிங் மற்றும் யு.பி.எஸ்.சி தேர்வு பயிற்சியாளர் அவத் ஓஜா ஆகியோர் அடங்குவர்.சிசோடியா 2013, 2015 மற்றும் 2020 இல் பட்பர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார். 2020 இல், அவர் வெறும் 3,100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். “2020 ஆம் ஆண்டில், கிழக்கு மற்றும் வடகிழக்கு டெல்லி உள்ளிட்ட சில இடங்களில் பாஜகவின் பிரச்சாரம் CAA எதிர்ப்பு போராட்டங்களில் கவனம் செலுத்தியது. குறைந்தது இரண்டு மூத்த பாஜக தலைவர்களாவது பட்பர்கஞ்சில் 10 நாட்களாக முகாமிட்டிருந்தனர். இந்த ஆண்டு இதுவரை, பா.ஜ.கவால் எந்த ஒரு காரணியையும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை” என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.நவம்பர் 21 அன்று, ஆம் ஆத்மி 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது, இதில் 2020 இல் பாஜகவிடம் தோல்வியடைந்த ஆறு இடங்கள் அடங்கும். அதில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் இருக்கும் இடங்கள் உள்பட புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அனில் ஜா, சௌத்ரி ஸுபைர் அகமது மற்றும் சுமேஷ் ஷோகீன் ஆகியார் கிராரி எம்.எல்.ஏ ரிது கோவிந்த், சீலம்பூர் எம்.எல்.ஏ அப்துல் ரஹ்மான் மற்றும் மாடியாலா எம்.எல்.ஏ குலாப் சிங்கிற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டனர்.கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அவசியம் என்று கட்சி கூறியது. அன்றிலிருந்து மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த இரண்டு நாட்களாக, ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் இருந்து அக்கட்சில் உள்ள டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் மற்றும் திமர்பூர் எம்எல்ஏ திலீப் பாண்டே ஆகியோர் இந்த முறை போட்டியிடப் போவதில்லை என அறிவித்தனர். அக்கட்சியின் குஜராத் தேர்தல் பிரச்சார பொறுப்பாளராக இருந்த குலாப் சிங்கும் போட்டியிட மாட்டார்.”சிட்டிங் எம்.எல்.ஏக்கள் மாற்றப்பட வேண்டிய இடங்கள் இன்னும் 10, 11 உள்ளன. ஒரு சில சமயங்களில், எம்.எல்.ஏ., பிரபலமாக இல்லையென்றாலும், எங்கள் சர்வே, கிரவுண்ட் ரிப்போர்ட் மூலம், கட்சி முன்னிலையில் இருப்பதாகக் காட்டினாலும், கடைசி நேரத்தில், எதிர்மறை வாக்களிப்பை தவிர்க்க வேண்டும் என்பதால், வேட்பாளரை மாற்றுவோம்” என்று கட்சி மூத்த தலைவர் கூறியுள்ளார்.2020 ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி 15 புதிய முகங்களைக் கொண்டு வந்தது. “இந்தத் தேர்தல் வித்தியாசமானது… நாங்கள் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க, எம்.எல்.ஏ.க்களின் புகழ் முக்கிய காரணியாகிறது” என்றார்.“கடந்த காலங்களில் நாங்கள் போட்டியிட்ட தேர்தல்களைப் போல் அல்ல. 2013 ஆம் ஆண்டில், கணிப்புகளை விட ஆம் ஆத்மி சிறப்பாக செயல்பட்டது. 2015 ஆம் ஆண்டு 70 இடங்களில் 67 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது ”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த முறை, ஆம் ஆத்மி கட்சி “மிகக் கடினமான தேர்தலை” எதிர்கொள்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சிசோடியா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அதன் உயர்மட்டத் தலைவர்கள், முக்கியமாக டெல்லி கலால் கொள்கை வழக்கில் பல மாதங்கள் சிறையில் இருந்து, தற்போது ஜாமினில் உள்ளனர். பல திட்டங்கள் மாதக்கணக்கில் நிலுவையில் இருப்பது தங்களுக்கு சவாலாக இருக்கும் என எம்.எல்.ஏக்கள் கூறுவதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியா கூட்டணியில் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுடன் கைகோர்க்கப் போவதில்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.மறுபுறம், ஊழல் குற்றச்சாட்டுகள், குறிப்பாக கெஜ்ரிவாலுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் டெல்லியின் கிராமப்புற பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என பாஜக நம்புகிறது.புதுடெல்லி எம்.எல்.ஏ கெஜ்ரிவால் ஜாமின் பெற்றதையடுத்து முதல்வர் பதவியில் இருந்து விலகினார். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதாக அவர் அறிவித்தார். அவருக்குப் பிறகு கல்காஜி எம்.எல்.ஏ அதிஷி தலைமை ஏற்றார். இந்த முறை இருவரும் ஏற்கனவே உள்ள தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.வழக்கமாக வேட்பாளர்களின் பட்டியலை முதலாவதாக ஆம் ஆத்மி வெளியிடும். ஆனால், தற்போது வேட்புமனு தாக்கல் தேதிக்கு முன்னர் சில பெயர்கள் அறிவிக்கப்படலாம். கட்சித் தொண்டர்கள், கவுன்சிலர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இடையே பெரிய பிரச்சனைகள் உள்ள பகுதிகளில் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும், மற்ற இடங்களில் சற்று தாமதமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் எனவும் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.