இந்தியா
டங்ஸ்டன் விவகாரம்; “உண்மையை மறைத்துப் பேசுவதா?” – முதலமைச்சருக்கு இ.பி.எஸ். கேள்வி
டங்ஸ்டன் விவகாரம்; “உண்மையை மறைத்துப் பேசுவதா?” – முதலமைச்சருக்கு இ.பி.எஸ். கேள்வி
மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர் தீர்மானம் கடும் விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என பேசினார். 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு பல்லுயிர் தளமாக அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய நிலையிலும், சுரங்க அனுமதி மத்திய அரசால் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார். எனவே சுரங்க அனுமதியை திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் மாநில அரசின் அனுமதியின்றி திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கக் கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் துரைமுருகன் பேசினார்.
அவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 2023 ஆம் ஆண்டே சுரங்க ஏலம் தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு எழுதிய கடிதத்திற்கு போதிய எதிர்ப்பை மாநில அரசு தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் வரும்போதே திமுக எம்.பி.க்கள் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை எனக்கூறிய எடப்பாடி பழனிசாமி, 2023 ஆம் ஆண்டு துரைமுருகன் எழுதிய கடிதத்தின் விவரங்களையும் வெளியிடவில்லை எனவும் பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய துரைமுருகன், ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே இருக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திருத்தம் சுயமரியாதைக்கு சவால் விடும் செயல் எனவும், நில உரிமைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தம் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக கடிதம் எழுதியதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் அமைச்சர்கள் சந்தித்து பேசியதாகவும், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சுரங்க ஏல அனுமதிக்கு மாநில அரசு எந்தவிதமான எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை என மத்திய அரசு கூறியிருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அவர், பத்து மாத காலங்களாக திமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
பின்னர் பேசிய முதல்வர், இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மத்திய அரசு ஏலமே விட்டிருந்தாலும் இந்த திட்டம் நான் முதலமைச்சராக இருக்கும் வரை செயல்படுத்த விட மாட்டேன் எனவும், அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் எனவும் சூளுரைத்தார்.
கடும் விவாதத்திற்கு பிறகு அரசினர் தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பிறகு ஒருமனதாக தீர்மானம் நிறைவேறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி, அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.
சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.… pic.twitter.com/V1riWfa03l
சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது” என்று பதிவு செய்துள்ளார்.
முதல்வரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “UPA அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.
NDA ஆட்சியில் கனிம வள உரிமைகள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலை தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் தம்பிதுரை பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை.
இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக M.P-க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
UPA அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.
NDA ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும்…
உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை ஸ்டாலின் ‘X’ வலைதளத்தில் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது. கேவலமானது” என்று பதிவிட்டுள்ளார்.