இந்தியா
“திமுக தான் சென்னைக்கு இதை முதலில் கொண்டு வந்தது” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
“திமுக தான் சென்னைக்கு இதை முதலில் கொண்டு வந்தது” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூபாய் 309 கோடி மதிப்பீட்டில், முடிவுற்ற 17 புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 493 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 559 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, த.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் சிறப்புரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மழை வெள்ளத்தில் கூட பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த அரசு சிறப்பான முறையில் செயல்பட்டது. அமைச்சர் நேருவிடம் ஏதேனும் பொறுப்பை ஒப்படைத்தால் அது 50 சதவீதம் நிறைவு பெற்றதாக அர்த்தம். நவம்பர் மாதம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மழையில் சிறப்பாகப் பணியாற்றினார்கள். சென்னை என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது வந்தாரை வாழவைக்கும் சென்னை.
சென்னை பட்டணம் என்ற மாநகரம் தற்போது எல்லாருடைய மாநகரமாகத் திகழ்கிறது. சென்னையில் முதல் முதலாக மேம்பாலம் கட்டிய அரசு திமுக அரசு. சென்னையில் டைடல் பார்க் மற்றும் ஐடி நிறுவனங்களைக் கொண்டு வந்து முதன்மை மாநிலமாக மாற்றியது கலைஞர். சென்னை மாநகரம் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து வருகிறது.
சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டமானது தற்போது சாத்தியப்பட்டு வருகிறது. சென்னையின் வளர்ச்சிப் பணிகளை 6000 கோடியில் செயல்படுத்தி வருகின்றனர். தற்போது ஹேப்பனிங் சிட்டியாக சென்னை மாநகராட்சி மாறி வருகிறது.
மக்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு திட்டங்கள் ஒரே இடத்தில் கிடைக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 1012 பணிகள் ரூ. 901 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டு செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 280 கோடி மதிப்பீட்டில் 493 பணிகளுக்கு அடிகள் நாட்டப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 225 குளங்கள் உள்ள நிலையில், மேலும் 41 குளங்கள் உருவாக்கும் பணிகள் தீவிரம் காட்டப்பட்டுவருகிறது. நீர்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான் 15 சென்டிமீட்டர் மழை பெய்தும் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. நிலத்தடி நீர் உயர்த்தும் பணியில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது” எனப் பேசினார்.