இந்தியா
நடுவானில் திக்.. திக்.. உயிர் தப்பிய 155 பேர் – சென்னையில் தரையிறங்கிய விமானத்தில் நடந்து என்ன?
நடுவானில் திக்.. திக்.. உயிர் தப்பிய 155 பேர் – சென்னையில் தரையிறங்கிய விமானத்தில் நடந்து என்ன?
சென்னையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு, கேரள மாநிலம் கொச்சி செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம் 147 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 155 பேருடன், உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதை கண்டுபிடித்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் அனுப்பினார்.
இதை அடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை உடனடியாக சென்னைக்கே திருப்பிக் கொண்டு வந்து தரையிறக்கும்படி உத்தரவு பிறப்பித்தனர். இதனால், ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் இன்று, காலை 7:15 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி வந்து, பத்திரமாக தரையிறங்கியது.
பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானப் பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களைச் சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விமானம் பழுதுபார்க்கப்பட்டு தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொச்சி செல்ல வேண்டிய 147 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகளை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால், விமானம் பெரும் ஆபத்திலிருந்து 147 பயணிகள் 8 விமான ஊழியர்கள் உட்பட 155 பேர் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். இதற்கு இடையே விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில், இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.