இலங்கை
மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு இல்லை!
மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு இல்லை!
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தற்சமயம் அவ்வாறான கொடுப்பனவை வழங்காமல் இருப்பதற்கு இலங்கை மின்சாரசபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை மின்சார சபை இவ்வருடம் பாரிய இலாபத்தை ஈட்டிய போதிலும், கடன் மீளச் செலுத்துவதற்கும் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சபை இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ள நிலையில், ஊழியர் மேலதிக கொடுப்பனவை டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சாரசபைத் தலைவரிடம் இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அண்மையில் கோரிக்கை விடுத்தது.
மின்சார சபை ஊழியர்களுக்கு கடந்த அரசாங்கத்தின் கீழ் இரண்டு வருடங்களாக மேலதிக கொடுப்பனவு கிடைக்காவிட்டாலும், அவர்களின் தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதால் ஊழியர்களுக்கு நிச்சயமாக மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதில்லை என பணிப்பாளர் சபை ஏற்கனவே இறுதி தீர்மானம் எடுத்துள்ளதாக எமது விசாரணையின் போது இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க உறுதிப்படுத்தினார்.
இலங்கை மின்சார சபை இவ்வருடம் பாரிய இலாபத்தை ஈட்டிய போதிலும் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடனை திருப்பி செலுத்துவதற்காக 112 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
அத்துடன், 2024ஆம் ஆண்டு மின்சார சபைக்கு கிடைத்த இலாபத்தில் மிகுதியான 41 பில்லியன் ரூபா இந்த ஆண்டு மின்கட்டணத்தை குறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். (ப)