இலங்கை
ஆசிய உயரடுக்கு குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரனுக்கு வெண்கலப் பதக்கம்!
ஆசிய உயரடுக்கு குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரனுக்கு வெண்கலப் பதக்கம்!
தாய்லாந்தின் சியாங் மாய் மண்டபத்தில் நடைபெற்றுவரும் ஆசிய உயரடுக்கு குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் பசிந்து உமயங்கன மிஹிரன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
குவைத் நகரில் 1987இல் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் பி.எல்.ஜே. ரட்னசிறி வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் 37 வருடங்களின் பின்னர் ஆசிய குத்துச் சண்டையில் இலங்கைக்கு பதக்கம் கிடைத்தது இதுவே முதல் தடவையாகும்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கால் இறுதிப்போட்டியில் மலேசியாவின் முதல் நிலை வீரரும் 22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்றவருமான மொஹமத் அப்துல் கய்யும் பின் ஆரிபின் என்பவரை வெற்றிகொண்டதன் மூலம் பதக்கம் ஒன்றை மிஹிரன் உறுதி செய்துகொண்டிருந்தார்.
கடந்த ஞாயிற்றக்கிழமை நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் 22 வயதுக்குட்பட்ட ஆசிய சம்பியன் ஆசில்பெக் ஜாலிலோவ் எதிர்கொண்ட உமயங்கன மிஹிரன் புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.
20 வயதுடைய ஜாலிலோவைவிட சர்வதேச குத்துச்சண்டையில் அனுபவம் குறைந்தவராக இருந்தபோதிலும் முதல் சுற்றில் கடுமையாக மோதிய 21 வயதான மிஹிரன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்தியஸ்தர்கள் வழங்கிய புள்ளிகளின் அடிப்படையில் 0 – 10 என மிஹரன் தோல்வி அடைந்தார்.
இரண்டாம் சுற்றிலும் தொடர்ந்து 3ஆவதும் கடைசியுமான சுற்றிலும் தலா 10 – 9 என ஜாலிலோவ் வெற்றிபெற்றதாக மத்தியஸ்தர்கள் அறிவித்தனர்.
இதற்கமைய ஒட்டுமொத்த புள்ளிகள் நிலையில் 27 – 30 என தோல்வி அடைந்த மிஹிரன், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய உயரடுக்கு குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பாக 13 போட்டியாளர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். (ச)