இலங்கை
கிளப் வசந்த கொலை சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க அனுமதி
கிளப் வசந்த கொலை சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க அனுமதி
வர்த்தகர் க்ளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்களையும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பதற்கு ஹோமாகமை மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் இர்ஷடீன் இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி, 8 சந்தேகநபர்களும் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பிணை மற்றும் 2 சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்களின் கடவுச் சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அத்துருகிரிய காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் திறப்பு விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் க்ளப் வசந்த உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.
இதற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 8 சந்தேகநபர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், சில சந்தேகநபர்களை வழக்கின் ஆட்சியாளராகப் பெயரிடுவதற்கு எதிர்பார்ப்பதாகச் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டவாதி சக்தி ஜாகொடஆராச்சி மன்றுரைத்துள்ளார்.