நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 10/12/2024 | Edited on 10/12/2024

சீகர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘எக்ஸ்ட்ரீம்’. இப்படத்தில் ரட்சிதா, அபி நட்சத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர்களுடன் இயக்குநர் பேரரசு கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் பேரரசு பேசுகையில், “உலகத்திலேயே மிக உயர்ந்த சாதனம் சினிமா. அது மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்களை சொல்கிறது. ஒரு ஆன்மிகவாதியோ அரசியல்வாதியோ அதை பேசவில்லை. பெண் பாதிப்பு குறித்து இந்த படம்தான் சொல்கிறது. அனைத்து நல்ல விஷயங்களை சொல்லிக்கொண்டிருப்பது சினிமாதான். அரசியல்வாதிகள் குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்களா? சினிமாவில்தான் சாதியை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறோம். ஆனால் யாராவது ஒரு அரசியல்வாதி சாதி ஒழிப்பேன் என்று பேசுகிறார்களா? எல்லா மதமும் சம்மதம் என்று நிறைய திரைப்படங்கள் வருகிறது. இதை அரசியல்வாதிகள் சொல்வார்களா? அரசியல்வாதிகள் மற்றும் ஆன்மிகவாதிகள் சொல்லவேண்டியதை இன்றைக்கு சினிமா சொல்லி வருகிறது. ஆனால் சினிமாக்காரர்களை கூத்தாடி என்கிறார்கள். அரசியல்வாதிகளை மாற்றி மாற்றி ஊழல் பற்றி குறை பேசி வருகிறார்கள். நல்ல விஷயங்களை அவர்கள் பேசுகிறார்களா? நல்ல விஷயமே சினிமாதான். சினிமா மாதிரி உயர்ந்தது உலகத்தில் எதுவும் இல்லை.

Advertisement

அரசியல்வாதிகள் குடும்பத்திலிருந்து சினிமாவில் வந்து நடிப்பார்கள். அதை சினிமாகாரர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்களா? ஆனால் சினிமாவிலிருந்து அரசியல் போனால் கூத்தாடி ஏன் வருகிறார்? என்கிறார்கள். உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. கூத்தாடி என்று சொல்வதை காலம் காலமாக கேட்டு வருகிறோம். ஆனால் நாங்கள்தான் ஆள்கிறோம். கலைஞரும் கூத்தாடிதான். அவரும் நாடகத்தில் பெண் வேடம் போட்டார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கூத்தாடிதான். கூத்தாடி என்று பெருமையாக சொல்வோம் ஏனென்றால் நாங்கள் நல்லது சொல்லி வருகிறோம். விஜயகாந்த்தும் கூத்தாடிதான். இன்றைக்கு விஜய் வந்துள்ளார் அவரையும் கூத்தாடி என்கிறார்கள். அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அதை பெருமையாகத்தான் நினைப்போம். கூத்தாடி என்பது பெருமையான வார்த்தை அதை இழிவாக சொல்லாதீர்கள். கூத்தாடுவது ஒரு தொழில் சாதியை இழிவுபடுத்தி பேசுவது எவ்வளவு பெரிய தவறோ அதே போல் கூத்தாடி என்று இழிவாக சொல்வதும் தவறு” என்றார்.