சினிமா
ரத்தக் காயங்களுடன் போலீஸை நாடிய நடிகர்.. மகனை காயப்படுத்திய தந்தை.. சிக்கலில் சூப்பர் ஸ்டார் குடும்பம்!
ரத்தக் காயங்களுடன் போலீஸை நாடிய நடிகர்.. மகனை காயப்படுத்திய தந்தை.. சிக்கலில் சூப்பர் ஸ்டார் குடும்பம்!
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். சூர்யாவின் “சூரரைப் போற்று” படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்திருப்பார். தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற குடும்பமாக விளங்குகிறது மோகன்பாபுவின் ‘மஞ்சு’ குடும்பம். தற்போது இந்தக் குடும்பம் சிக்கலை சந்தித்து வருகிறது. நடிகர் மோகன்பாபுவுக்கு விஷ்ணு மன்சு, மனோஜ் மன்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். தந்தையைப் போலவே இவர்களும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் குடும்பத்துக்குள் சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே சொத்து பிரச்சனை நிலவிவந்த நிலையில், தற்போது அது கைகலப்பாக மாறும் அளவுக்கு சென்றுள்ளது.
சில நாட்கள் முன் சொத்து பிரச்சனை காரணமாக தனது மகன் மனோஜ் தன்னைத் தாக்கியதாக ஹைதராபாத் பஹாடி ஷெரிஃப் காவல் நிலையத்தில் நடிகர் மோகன்பாபு புகார் அளித்தார் என்று தகவல் வெளியானது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று நடிகர் மனோஜ் 100-க்கு போன் செய்து தன்னையும் தனது மனைவியையும் தனது தந்தையான மோகன்பாபு தாக்கியதாகவும், இதில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறி, ரத்தக்காயத்துடன் புகார் கொடுத்ததாக சொல்லப்பட்டது.
இதையடுத்து காயங்களுடன் சிகிச்சை பெற்றார் நடிகர் மனோஜ். சிகிச்சைக்குப் பிறகு கழுத்தில் பெல்ட்டுடன் பொதுவெளியில் தோன்ற, இந்தப் புகைப்படங்கள் வைரலானது.
ஆனால், மனோஜின் குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகர் மோகன்பாபு, “மனோஜ் காயங்களுடன் போலீஸில் புகார் கொடுத்ததாக கற்பனைக் கதைகள் பரப்பப்படுகின்றன. அதில் உண்மை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், போலீஸ் டிசிபி சுனிதா ரெட்டி, இந்த வழக்கை விசாரித்ததாக உறுதிப்படுத்தியுள்ளார். இது குடும்ப பிரச்சனை எனத் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு தொடரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.