இந்தியா
வன்னியர் உள் இட ஒதுக்கீடு; முதல்வர் சொன்ன காரணம்.. சட்டமன்றத்தில் பாமக அமளி
வன்னியர் உள் இட ஒதுக்கீடு; முதல்வர் சொன்ன காரணம்.. சட்டமன்றத்தில் பாமக அமளி
வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முறையாக கொண்டு வராததே உச்சநீதிமன்றம் தடை விதிக்க காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் துணை மதிப்பீடுகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாமக சட்டமன்றத் தலைவர் ஜி.கே.மணி, “சாதி வாரி கணக்கெடுப்பு என்பது தலைகளை எண்ணுவதல்ல” எனவும், “நலிந்த மக்களை கணக்கெடுத்து அவர்களை மேம்படுத்துவது” என பேசினார். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாலும், இறுதியில் அது காணல் நீராகிவிட்டதாக பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட துறையின் அமைச்சர் மெய்யநாதன், தற்கால தரவுகளின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், “மத்திய அரசால் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த முடியும் என்பதால் மத்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் இஸ்லாமியர்கள், அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை போலவே வன்னியர்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு சரியாக இருந்ததால், அதனை யாராலும் ரத்து செய்ய முடியவில்லை எனவும், அதிமுக ஆட்சியில் தேர்தல் அரசியலுக்காக அவசரகதியில் கொண்டு வரப்பட்ட உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “சட்டத்தை முறையாக கொண்டுவராத நிலையிலும், ஆட்சி மாற்றத்திற்கு பின்பு அதனை நிறைவேற்ற தயாராகவே இருந்ததாகவும், நீதிமன்றம் தடை விதித்த நிலையில் நாங்கள் என்ன செய்வது. இது யாருடைய தவறு” எனத் தெரிவித்தார். முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்காத காரணத்தினால் பாமக உறுப்பினர்கள் சற்று நேரம் அமளியில் ஈடுபட்டனர்.