சினிமா
25 Years of Bala : தமிழ் சினிமாவின் இன்னொரு முகத்தை காட்டிய பாலா
25 Years of Bala : தமிழ் சினிமாவின் இன்னொரு முகத்தை காட்டிய பாலா
ஒரு தமிழ் திரைப்படம் இப்படித்தான் இருக்கும் என்று இதர மொழி ரசிகர்களோ, தீவிர உலக சினிமா ஆர்வலர்களோ நினைத்திருந்த வேளையில், அந்த எண்ணத்தைத் தகர்த்தெறிந்தவர் இயக்குனர் பாலா.
அதற்கு முன்னரும் பின்னரும் பல இயக்குனர்கள் அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கி குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைந்தபோதும், அவரது படங்கள் காட்டிய உலகம் வேறாக இருந்தது. அவை ஏற்படுத்திய மாற்றங்கள், அதன் பின்வந்த படங்களில் பிரதிபலித்தன. அந்த வகையில், தமிழ் சினிமாவின் இன்னொரு முகத்தை வெளிக்காட்டியவர் பாலா.
அதனை முன்னுணர்த்தும் விதமாகவே, 2008ஆம் ஆண்டுக்கான தேசிய விருது விழா குழுவில் இடம்பெற்ற இயக்குனர் ஷாஜி என்.கருண் ’தமிழ் சினிமாவின் பாத்திர வார்ப்பை பாலா மாற்றிய விதம் பிரமிப்புக்குரியது’ என்று தெரிவித்திருந்தார்.
அந்த பிரமிப்புக்குக் காரணமான, இயக்குனர் பாலாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய, அவரது முதல் படமான ‘சேது’ வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன.
மதுரையில் பிறந்து வளர்ந்த பாலா, கல்லூரிப் படிப்பை முடித்ததும் தமிழ் சினிமாவில் சேர வேண்டுமென்று துடித்தார். சினிமாவில் தயாரிப்பு நிர்வாகியாக, தயாரிப்பாளராகத் திகழ்ந்த எம்.கபார் உதவியோடு சென்னை வந்தார். 1987ஆம் ஆண்டு வெளியான ‘ரெட்டைவால் குருவி’ படத்தில் தயாரிப்பு நிர்வாகம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டார்.
பிறகு ‘வீடு’ படத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராகச் சேர்ந்து பணியாற்றினார். சந்தியா ராகம், வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதிலீலாவதி படங்களின் உருவாக்கத்தில் பங்கேற்றார். அந்த காலகட்டத்தில் ‘குருகுல வாசம்’ போல் அவர் பாலு மகேந்திராவிடம் காட்சியாக்கம் குறித்த பல பாடங்களைக் கற்றுக்கொண்டார். அது, அவரை இயக்குனர் எனும் அந்தஸ்தை நோக்கி நகரச் செய்தது.
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இளையராஜா, சிவகுமார் போன்ற திரையாளுமைகளிடம் அவர் நற்பெயரைப் பெற்றார். அதற்குக் காரணம் ஒரே ஒரு திரைப்படம் தான்.
கிட்டத்தட்ட நான்காண்டு காலம் உடலையும் உள்ளத்தையும் வருத்தி பாலா வார்த்த படமது. தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள், நாயகன் நாயகி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மாறியபோதும் தான் மனதில் வடித்த திரைப்படத்தை உருவாக்கியே தீர்வது என்று உறுதியோடு இருந்தார். ஆனால், ‘சேது’ என்ற பெயரில் அக்கதை உருவானபோது அந்த உறுதி ஒரு வடிவத்தை அடைந்தது.
ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, நாயகன் விக்ரம், அவரது சகோதரராக நடித்த சிவகுமார் தொடங்கி அந்த படத்தில் நடித்த, பங்கேற்ற அத்தனை பேரும் பாலாவின் மனதில் இருந்த உலகின் மீது பெரும் நம்பிக்கையை வைத்தனர். அது அப்படத்தில் அப்பட்டமாகத் தெரியும்.
’சேதுவுக்கு எத்தனை பிரிவியூ ஷோ நடந்திருக்கு தெரியுமா’ என்ற கேள்வியே, இன்று தடைகளைத் தாண்டி திரையரங்குகளுக்கு வரத் துடிக்கும் எத்தனையோ திரைப்படங்களை உருவாக்கியோருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
ஏனென்றால், 1999ஆம் ஆண்டில் அப்படிப் பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர் அந்த படத்தை திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பாகப் பார்த்தனர். ’நல்லாயிருக்கு.. ஆனா ஓடாது’ என்பதே பலரது பதிலாக இருந்திருக்கிறது. அதனைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றிருந்தால், இன்று பாலா என்றொரு இயக்குனரை நாம் அறியாமலேயே போயிருப்போம்.
அனைத்து தடைகளையும் மீறி, டிசம்பர் 10 வெள்ளிக்கிழமையன்று வெளியானது ‘சேது’. நான்கைந்து நாட்களில் அனைத்து படப்பெட்டிகளும் திரும்பிவிடும் என்ற நிலையே தொடக்க காட்சிகளில் இருந்தது. ஆனால், அதற்கடுத்த வாரத்தில் இருந்து நிலைமை தலைகீழானது.
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து, கல்லூரி மாணவர் மாணவியர் தியேட்டர்களில் குவிய நிலைமை தலைகீழானது. காரணம், அந்தளவுக்கு அப்படத்தில் காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமெண்ட் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘கமர்ஷியல் அம்சங்கள்’ கொட்டிக் கிடந்தன. ஆனால், அப்போதிருந்த படங்களில் இருந்து அவை வேறுபட்டிருந்ததுதான் வித்தியாசம். அந்த வித்தியாசமே, பாலாவை தமிழ் சினிமாவில் புதிய ஒளிக்கீற்றாக நமக்குக் காட்டியது.
‘சேது’வில் கொஞ்சம் முரட்டு இளைஞனை, அவரது நண்பர்களை, காதலியை, உலகத்தைக் காட்டிய பாலா எனும் இயக்குனர், இரண்டாவது படமான ‘நந்தா’வில் ஒரு கோபக்காரனை முன்னிறுத்தியிருந்தார். கோபம் என்று சொல்வதை விட ரௌத்திரம் என்று சொல்வதே சரி.
முதல் படத்தில் விக்ரம் பெருங்கவனத்தைக் குவித்தது போலவே, இதில் நான்கைந்து படங்களில் நடித்திருந்த சூர்யாவைத் தமிழ்நாடே உற்று நோக்குகிறவராக மாற்றிக் காட்டினார்.
தன்னால் நட்சத்திர அந்தஸ்தை அடைந்த சூர்யாவையும் விக்ரமையும் ‘பிதாமகன்’ படத்தில் ஒன்றிணைத்தார் பாலா. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாயகர்கள் ஒரு திரைப்படத்தில் ஒன்றிணைவது கடினம் எனும் நிலையை மாற்றப் பழம் தின்று கொட்டை போட்ட இயக்குனர்களே திணறிய காலமது.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அப்படத்தில் இருவருக்கும் பெயர், புகழ் கிட்டும்படி உருவாக்கினார். தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்தார்.
சில காலம் தனிப்பட்ட வாழ்வில் கவனம் செலுத்திய பாலா, ‘ஒரு இயக்குனர் என்றால் இப்படியிருக்க வேண்டும்’ என்று சொல்லும்விதமாக ‘நான் கடவுள்’ளில் நம்மில் பலர் அறியாத ஒரு உலகத்தைத் திரையில் படரவிட்டார். பிச்சை எடுப்பதை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்களையும், தொழிலாக அதனை நடத்தி வருபவர்களையும் ஒருங்கே காண்பித்தார்.
அது தந்த அதிர்ச்சியும் பிரமிப்பும் வார்த்தைகளுக்குள் அடங்காதது. அதுவே அவருக்குச் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. மேற்சொன்ன படங்கள் மட்டுமல்லாமல், அடுத்து பாலா தந்த அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் படங்களும் சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கிற மனிதர்களை மையப்படுத்தியிருந்தன.
முதல் நான்கு படங்கள் அளவுக்கு இவை வெற்றி பெறாவிட்டாலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இதர மொழிகளில் இப்படங்களின் தாக்கத்தில் சில கதைகள் திரையுருவம் பெற்றன. அதுவும் ஒருவகை சாதனையே.
தொடக்க காலத்தில் அசாதாரணமான மனிதர்கள் குறித்த கதைகளை ஒரு சாதாரண ரசிகன் பார்வையிலேயே படைத்தார் பாலா. ஆனால், அதன்பிறகான படங்களில் அந்த பார்வை நீர்த்துப் போயிருந்தது. அறிவுஜீவித்தனமாகப் பேசுகிற, விவாதிக்கிற, சிந்திக்கிற சிலருக்காகத் தனது சிறப்பியல்பைக் கைவிட்டுவிட்டாரோ பாலா என்று எண்ணச் செய்தன.
இது ஒரு பார்வை. இதனை பாலாவின் தீவிர ரசிகர்கள் நிந்திக்கலாம். ஆனால், அவரும் அவ்வாறு புறந்தள்ளிவிடக் கூடாது என்பதே நம் விருப்பம். ஏனென்றால், அவரது படைப்புகள் அனைத்திலும் ‘புறக்கணிப்பின் வலி’ நிறைந்திருக்கிறது.
இயக்குனர் பாலாவின் படங்களில் தென்படுகிற வன்முறையைக் காட்டிலும், அதனை ரசிகர்கள் ஏற்கும்விதமாகக் கதை சொல்லல் வலுவாக அமைக்கப்பட்டிருக்கும். நாம் பார்த்த நகைச்சுவை, அழுகை, காதல் காட்சிகளில் இருந்து, அவரது திரைப்படங்கள் வேறுபட்டு நிற்கும். அந்த எண்ணத்தை வலுப்படுத்தும்விதமாக, பாலாவின் இன்னொரு உலகம் அப்படத்தில் வெளிப்பட வேண்டும்.
இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கிற ‘வணங்கான்’ அதற்கான பதிலாக அமையலாம். அப்படம் அதனை நிகழ்த்தும் பட்சத்தில், ‘சேது’வை ‘ரீரிலீஸ்’ செய்வது மேலும் பல வாணவேடிக்கைகளைக் காண வைக்கும்!